‘இதயம் முரளி’ படத்தை முதலில் வேண்டாம் என்றேன்: அதர்வா

‘இதயம் முரளி’ படத்தை முதலில் வேண்டாம் என்றேன்: அதர்வா

2 mins read
cb887502-4198-48b3-92d3-8b3f75172dba
‘இதயம் முரளி’ படக்காட்சி. - படம்: விகடன்
multi-img1 of 2
Google News Preferred Icon

‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘இதயம் முரளி’. அதர்வா, கயாது லோஹர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்குத் தமன் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வரும் ஜூலை 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டையொட்டி ‘சினிமா விகடன்’ யூடியூப் ஒளிவழிக்கு நடிகர் அதர்வா சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது, படத்தின் தலைப்பு உருவான விதம், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து அவர் சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்த் திரையுலகில் பலரால் பேசப்பட்டு வந்தது.

“இந்த இயக்குநர் பண்ணுகிறார், அந்த நடிகர் பண்ணுகிறார் என்றெல்லாம் பல செய்திகள் உலா வந்தன. ஆனால், இறுதியில் ஒரு நல்ல கதையின் மூலம் அந்தத் தலைப்பு என்னை வந்து சேர்ந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

“முன்பு எனது தந்தை (முரளி) நடிப்பில் வெளியான ‘இதயம்’ திரைப்படம் ஒரு காதல் காவியம். அது ஒருதலைக் காதலைப் பற்றிய கதையாக இருந்தாலும் காலப்போக்கில் பலருடைய உணர்வாகவே மாறிவிட்டது.

“அந்தத் தலைப்பு, ஒருதலையாகக் காதலிக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒரு தனித்துவமான உணர்வைத் தந்தது. அதனால், இந்தத் திரைப்படம் என் திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பானது.

“முதலில் படத்திற்கு இந்தத் தலைப்பை வைக்கலாம் என்று இயக்குநர் ஆகாஷ் சொன்னபோது, இந்தத் தலைப்பு மட்டும் வேண்டாம், வேறு ஏதாவது மாற்றி வையுங்கள் என்றுதான் கூறினேன்.

“தலைப்பு குறித்து எனக்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது; சரியாக இருக்குமா என்ற பயமும் இருந்தது.

“அதனால், அவர் எனக்குக் கதையைத் திரைக்கதை வடிவமாக மாற்றிக் கொடுக்கும்போதெல்லாம் வேறு ஒரு தற்காலிகத் தலைப்பைப் போட்டுத்தான் தருவார்.

“ஆனால், இறுதியாக இந்தக் கதைக்கு இதுதான் மிகப்பொருத்தமான தலைப்பு என்று அவர் எனக்கு முழுமையாக விளக்கியபோது, அதன் நியாயத்தைப் புரிந்து கொண்டு, இதையே வைத்துக்கொள்ளலாம் என்று மிகுந்த உற்சாகத்தோடு சம்மதித்தேன்,” என்றார் அதர்வா.

அம்மாவின் வார்த்தையும் கூடுதல் பொறுப்பும்

“என் அம்மா பொதுவாக எதையும் பெரிதாக உணர்ச்சிகரமாகப் பேசமாட்டார். ஆனால் இந்தத் தலைப்பைக் கேட்டதும், இந்தப் படம் ஒரு நல்ல திரைப்படமாக வரவேண்டும் என்பதை மட்டும் நீ மனத்தில் நிலைநிறுத்திக் கொள் என்று அறிவுறுத்தினார். அம்மாவின் அந்த வார்த்தைகள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன.

“அதனால், தினமும் காலையில் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே இயக்குநர் ஆகாஷை கைப்பேசியில் அழைத்து, இது நமக்கு மிக முக்கியமான படம். இந்தக் காட்சி கச்சிதமாக வந்துவிடுமா? அந்தக் காட்சி சரியாக வந்துவிடுமா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன்.

“வழக்கமாக ஒரு திரைப்படத்திற்குப் போடும் உழைப்பைவிட, இந்தத் திரைப்படத்திற்கு எனக்குக் கூடுதல் பொறுப்பும் அக்கறையும் இருந்தது,” என்று அதர்வா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்