திரையுலகில் அறிமுகமான புதிதில், தாம் இசையமைத்த சில படங்கள் வெற்றி பெறாததால் தன்னை ராசியில்லாதவன் என்று பலரும் ஒதுக்கியதாகச் சொல்கிறார் யுவன் சங்கர் ராஜா.
இதனால் ஏற்பட்ட விரக்தியில் தன் வீட்டிலுள்ள ஓர் அறையில் அமர்ந்து கதவைப் பூட்டிக்கொண்டு அழுததாக அண்மையில் நடைபெற்ற பள்ளி விழாவில் பேசிபோது அவர் குறிப்பிட்டார்.
“சில நாள்கள் இப்படியே கழிந்தன. மனதைத் தேற்றிக்கொண்டு மீண்டும் இசையமைக்கத் தொடங்கினேன். அதன் பலனாக இன்று உங்கள் முன் நிற்கிறேன்.
“பேசுகிற வாய் பேசிக் கொண்டேதான் இருக்கும். நாம் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் நம் செயல்களைத் தொடர வேண்டும்,” என்றார் யுவன் சங்கர் ராஜா.
எதிர்மறை எண்ணங்கள் நம்மை வீழ்த்த முயற்சி செய்யக்கூடும் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் எதற்கும் செவிசாய்த்துவிடக் கூடாது என்றார்.
எப்போதுமே தலைநிமிர்ந்தபடி அனைத்தையும் கடந்து வர வேண்டும் என்றார் யுவன்.
“இதனால்தான் என்னால் இத்தனை ஆண்டுகளாக இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிகிறது. என் காதுகள் எப்போதுமே எதிர்மறையான வார்த்தைகளைப் புறக்கணித்து மூடியே இருக்கும்.
“நல்ல இசைக்காகவும் நேர் மறையான வார்த்தைகளுக்காகவும் மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும்,” என்று யுவன் குறிப்பிட்டபோது, மாணவர்கள் பலத்த கைத்தட்டல்களுடன் அவரது பேச்சை வரவேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்களும் எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் எதையும் அணுக வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், அப்போதுதான் வாழ்க்கையின் இலக்குகளை அடைய முடியும் என்றார்.
அத்தகைய வழிமுறையைக் கையாண்டதால்தான் தம்மால் சாதிக்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பலர், பலவிதமாகப் பேசியபோதும் ஒரு கட்டத்தில் நான் தெளிவாகச் செயல்பட்டேன். அதற்கான பலனை பின்னர் பெற்றேன்,” என்று பேசினார் யுவன் சங்கர் ராஜா.
தற்போது மூன்று பெரிய படங்களுக்கு இவர் இசையமைத்து வருகிறார்.