திரைத்துறையில் ஒரு நடிகையாக அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா.
‘நேஷ்னல் கிரஷ்’ எனும் பட்டத்துடன் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் மனத்திலும் நீங்காத இடத்தை அவர் பெற்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தெலுங்கானா மாநிலத்தின் உயரிய ‘கட்டார்’ திரைப்பட விருதுகள் 2025 வழங்கும் விழா, அவரது திரைப்பயணத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
குடும்பமாக வருகை தந்த ராஷ்மிகா
கடந்த பிப்ரவரியில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை மணந்து “தேவரகொண்டா” குடும்பத்தின் மருமகளாக மாறிய பிறகு, ராஷ்மிகா பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.
ஹைதராபாத்தில் நடந்த அவ்விழாவிற்கு, தமது மாமியார் மாதவி தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா வருகை தந்தார். அவர்கள் இருவரும் கைகோர்த்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.
‘தி கேர்ள் பிரண்ட்’ தந்த அங்கீகாரம்
கடந்த ஆண்டு வெளியான ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தில் ராஷ்மிகாவின் முதிர்ச்சியான நடிப்பு விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தத் திரைப்படத்திற்காக அவருக்குத் தெலுங்கானா மாநிலம் சார்பில் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டது.
அவ்விருதைப் பெற்றுகொண்ட அவர், “இந்த மேடை எனக்கு வெறும் விருதை மட்டும் தரவில்லை’; ஒரு பெரிய அங்கீகாரத்தைத் தந்துள்ளதாக உணர்கிறேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் திரையுலகிற்கு வந்தேன். அப்போது, எனது கன்னட உச்சரிப்புக்காகவும், எனது உடல் மொழிக்காகவும் கடுமையாகக் கேலி செய்யப்பட்டேன். பல இரவுகளை அழுது கொண்டே கழித்திருக்கிறேன். நான் எதைச் செய்தாலும் அது விமர்சிக்கப்பட்டது,” எனக் கண்ணீர் மல்க கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால் இன்று, தெலுங்குத் திரையுலகமும் தெலுங்கானா மாநில அரசும் எனக்கு இந்தச் சிறப்பை வழங்கியுள்ளது. நான் இந்த மண்ணின் மருமகளாக, உங்கள் வீட்டுப் பெண்ணாக இங்கு நிற்கிறேன். கடின உழைப்பு ஒருபோதும் தோற்காது என்பதற்கு இந்த விருது ஒரு சாட்சி,” என உருக்கமாக அவர் பேசினார்.
கணவர், மாமியாருக்கு நன்றி
தனது வெற்றிக்குப் பின்னால் இருக்கும் குடும்பத்தைப் பற்றிப் பேசுகையில், “திருமணத்திற்குப் பிறகும் எனது கனவுகளை நனவாக்க எனக்கு முழு சுதந்திரமும் ஆதரவும் அளிக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இன்று என்னுடன் வந்து அமர்ந்திருக்கும் எனது மாமியார் மாதவி அம்மா தான் எனக்குப் பெரிய பலம்,” எனக் கூறி நெகிழ்ந்தார் ராஷ்மிகா.
திரைக்கும் வரும் படங்கள்
ராஷ்மிகா நடிப்பில் உருவாகிவரும் ‘மைசா’ படத்தின் முக்கியக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள ‘ரணபாலி’ படத்தில் தனது நிஜ வாழ்க்கைத் துணையான விஜய்யுடன் இணைந்து அவர் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேலிகளைக் கடந்து, திறமையால் சிகரம் தொட்ட ராஷ்மிகாவின் இந்தப் பயணம், பல இளம் கலைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

