‘மதராஸி’ படம் மிகச் சிறப்பாக உருவாகி உள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், வாழ்க்கையில் அன்பு மிக முக்கியமான அம்சம் என்றும் ‘மதராஸி’ படம் இந்தக் கருத்தை முன்னிலைப்படுத்தும் படைப்பாக உருவாகி உள்ளது என்றும் குறிப்பிட்டா்.
பின்னர் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் சிவகார்த்திகேயன்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் இசையமைப்பாளர் அனிருத்துடன் மீண்டும் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனிருத் தன்னுடைய நெருக்கமான நண்பர் என்றும் கல்லூரி காலத்தில் தனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களால்தான் இன்று தாம் திரைப்பட நடிகராக ஓர் இடத்தைப் பெற முடிந்தது என்றும் கூறினார்.
“சண்டைக் காட்சிகளில் நடித்தால் உடலில் வலி ஏற்படும். காதல் காட்சிகள் மனத்தை வலிக்க வைக்கும். ஆனால், எனக்கு மனத்தில் ஏற்படும் வலி பிடிக்கும். அதனால் காதல் காட்சிகளில் நடிக்க விரும்புவேன்.
“மாயஜாலம் செய்வதற்கான ஒரு ‘ரிமோட்’ கிடைத்தால் எனது கல்லூரி நாள்களுக்கே திரும்பிச் செல்வேன். பின் வரிசையில் உட்கார்ந்து நண்பர்களோடு கிண்டல் செய்த நாள்களை மறக்க இயலாது.
“எனக்குப் பிடித்த நடிகர் எப்போதுமே நம் தலைவர் ரஜினிகாந்த்தான். அவர் பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல” என்று சூப்பர் ஸ்டாரின் வசனத்தையும் அவரது குரலில் செய்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார் சிவகார்த்திகேயன்.
பிடித்த இயக்குநர் என்று ஒருவரது பெயரை மட்டும் குறிப்பிட இயலாது என்று தெரிவித்த அவர், ஒவ்வொரு படைப்பாளியும் தமக்குப் பிடித்தமானவர்தான் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக முதலில் மேடையேறிய பாடகர் ஆதித்யா ஆர்கே, ‘மதராஸி’ படம் மற்றும் அதற்கு முன் ‘டான்’ படங்களில் பாட தமக்கு வாய்ப்பு வழங்கியதற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் பேசிய ‘மதராஸி’ பட நாயகி ருக்மிணி வசந்த், “இது என் இரண்டாவது தமிழ்ப் படம். என்னை அன்புடன் ஏற்றுக்கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. சிவகார்த்திகேயனின் ஊக்கம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது,” என்றார்.

