‘96’ பட இயக்குநர் பிரேம் குமார், கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியபோது, “96’ படத்திற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து பிரேம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். பணம், புகழின் பின்னாடி ஓடுபவரல்ல பிரேம். கலைகளுக்குப் பின்னால் ஓடுபவர். அவர் கொடுத்த கதையைப் படித்தபோது ஆறு இடங்களில் என்னை அறியாமல் கண்ணீர் வடித்தேன்.
“பொங்கல், தீபாவளி விடுமுறை என்றால் சென்னையில் இருப்பவர்கள் அவரவர் ஊருக்குப் பறந்து செல்கிறார்கள். ஏனெனில் சொந்த ஊர், கிராமம் என்றால் எல்லோருக்கும் அவ்வளவு பிடிக்கும். நானும் சிறுவயதில் விடுமுறை என்றால் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவேன். எனக்கும் சொந்த கிராமம் என்றால் அவ்வளவு பிடிக்கும். அதுபோல் நமது சொந்த ஊர், கிராமத்திற்குச் சென்று வரும் அற்புதமான அனுபவத்தைத்தான் இந்தப் படம் உங்களுக்குக் கொடுக்கும்.
“96’ படத்தைப் போலவே இந்தப் படமும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சிகூட இருக்காது,” என்று கூறியுள்ளார் கார்த்தி.
என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்தால் என்னைப் போல் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லமாட்டார்கள்: அரவிந்த் சாமி
நடிகர் அரவிந்த் சாமி பேசியபோது, “மெய்யழகன்’ கதையைப் படித்ததும் என் வாழ்வில் நடந்த கதையைப் போல் உணர்ந்தேன். என் வாழ்வில் நடந்த, இன்னும் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கும் கதை இது.
“கார்த்தியும் நானும் ரொம்ப நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டதாக நம்புகிறேன். என் அண்ணன் கார்த்தி. அந்த அளவிற்கு நாங்கள் இந்தப் படத்தின் மூலம் பழகியிருக்கிறோம். இந்தப் படம் எல்லோருக்கும் மிகவும் பிடித்த படமாக இருக்கும்.
“என்னைப்போல் மாப்பிள்ளை வேண்டும் என கேட்பவர்களுக்கு எனது நிஜ வாழ்க்கை பற்றி முழுமையாகத் தெரியாது என நினைக்கிறேன். படங்களில் எனது நடிப்பை வைத்து நான் அப்படித்தான் இருப்பேன் என நம்பிவிடுகின்றனர். ஆனால், நிஜத்தில் அப்படி அல்ல. சினிமாவில் ஒரு மேஜிக் இருக்கிறது. என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தால் நீங்கள் அப்படிச் சொல்லமாட்டீர்கள்” என்று கலகலப்பாகப் பேசியிருக்கிறார் அரவிந்த் சாமி.

