பிரியாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும்; ஆனால், இனிமேல் வேண்டாம்: சிம்பு

பிரியாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும்; ஆனால், இனிமேல் வேண்டாம்: சிம்பு

2 mins read
eeaaa645-9a1c-48e9-bd97-fdb5daa78b17
நடிகர் சிம்பு. - படம்: பின்டர்ரஸ்ட்
multi-img1 of 2
Google News Preferred Icon

பிரியாணி என்றாலே பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும்.

வயது அதிகரிக்கும்போது உடலின் செரிமானத் திறன், வளர்சிதை மாற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளமையில் எளிதாகச் செமித்த சில உணவுகள் பின்னர் உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

இதுபோன்ற காரணங்களால் தனது உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்துள்ளதாக கோலிவுட்டின் முன்னணி நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தெரிவித்துள்ளார்.

தனக்கு மிகவும் பிடித்த உணவு எப்போதுமே பிரியாணிதான் என்றும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு நாம் சாப்பிடும் உணவுகள் உடலில் முன்புபோல் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, உடல்நலனைப் பராமரிக்க அசைவ உணவுகளைத் தவிர்த்துத் தற்போது சைவ உணவுக்கு மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அசைவ உணவுகள் வயிறு கனமாகவும் உப்பலாகவும் இருக்கும் உணர்வைத் தருவதாகவும் சைவ உணவு உடல் இலகுவாக இருக்க உதவுவதாகவும் சிம்பு கூறியுள்ளார்.

மேலும், நமக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிட முடியாது என்றும் ஒரு கட்டத்தில் உணவில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலம்பரசனின் உணவுமுறை மாற்றம் குறித்துத் தானேவில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைகளின் தலைமை உணவியல் நிபுணர் டாக்டர் அம்ரீன் ஷேக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறுவது உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், அம்மாற்றம் முறையான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

“இறைச்சியைத் தவிர்த்துவிட்டுச் சாதம், இட்லி, தோசை போன்ற மாவுச்சத்து உணவுகளை மட்டும் அதிக அளவில் சாப்பிடுவது முழுமையான சைவ உணவுமுறை ஆகாது என்றும் மருத்துவர் அம்ரீன் ஷேக் எச்சரித்துள்ளார்.

“புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 ஆகிய ஊட்டச்சத்துகள் குறையாமல் இருக்க பருப்பு வகைகள், பயறு வகைகள், சுண்டல், சோயா, பால் பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

“சைவ உணவுகள் என்றாலே அவை முழுமையாக ஆரோக்கியமானவை என்று முடிவெடுக்க முடியாது,” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“பொரித்த உணவுகள், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து, சத்துகள் நிறைந்த முழுத் தானியங்கள், காய்கறிகளைச் சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

“திடீரென அசைவ உணவை முற்றிலும் நிறுத்துவதற்குப் பதிலாக, அதன் அளவைப் படிப்படியாகக் குறைத்து, பருப்பு வகைகள், பயறு வகைகள், கொண்டைக்கடலை, ராஜ்மா, சோயா உள்ளிட்ட தாவர அடிப்படையிலான புரத உணவுகளை அதிகப்படுத்தலாம்.

“அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் சைவ உணவுக்கு மாறும்போது குறைய வாய்ப்புள்ளது.

“தனிப்பட்ட உடல் தேவைகளுக்கு ஏற்ப ஊட்டச்சத்துச் சமநிலையைப் பேண மருத்துவர் அல்லது தகுதிபெற்ற உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

நடிகர் சிம்பு.
நடிகர் சிம்பு. - படம்: பின்டர்ரஸ்ட்
குறிப்புச் சொற்கள்