வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்தேன்: பாவனா

3 mins read
6f7d381b-a778-4075-91ef-265bf63b4689
நடிகை பாவனா. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. அப்படத்திற்குப் பிறகு ‘வெயில்’, ‘ஜெயம் கொண்டான்’, ‘தீபாவளி’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அவர் பிரபலமானார்.

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘அசல்’ படத்தில் அவர் நடித்திருந்தார்.

15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘தி டோர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் வலம்வர இருக்கிறார் பாவனா.

அவரிடம் தமிழ் ஊடகம் ஒன்று அண்மையில் நடத்திய நேர்காணலின் சில தகவல்களை இங்கு காணலாம்.

‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலமாகத் தமிழ் மொழிக்கு அறிமுகமான எனக்கு அது முதல் வாய்ப்பில்லை எனப் பேசத் தொடங்கிய பாவனா, அப்படத்திற்கு முன்பு தமிழ்த் திரையுலகில் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் தான் நிராகரித்ததாகக் கூறினார்.

“என் தந்தை திரைத்துறையில்தான் பணியாற்றினார். அவருக்குத் திரையுலகைப் பற்றி நன்கு தெரியும். அதே நேரம், தமிழில் யாரையும் எனக்கும் என் தந்தைக்கும் தெரியாத காரணத்தாலும் தயக்கத்தாலும் தமிழ்ப் படங்களில் நடிக்க மறுத்தேன்,” என பாவனா சொன்னார்.

இயக்குநர் மிஷ்கின் பாவனாவின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அவரைத் தேடி திருவனந்தபுரம் வந்ததாகத் தன் தமிழ்த் திரையுலகப் பயணத்தை விவரிக்கத் தொடங்கினார் அவர்.

“இந்தக் கதையை கேளுங்கள். அதன்பிறகு, உங்கள் பதிலைச் சொல்லுங்கள் எனத் தன் தந்தையிடமும் தன்னிடமும் ‘சித்திரம் பேசுதடி’ இயக்குநர் மிஷ்கின் கூறியதாக பாவனா தெரிவித்தார்.

“எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துவிட்டது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. என் தந்தை அனுமதி வழங்க முதலில் தயங்கினார். பின்னர் ஒப்புக்கொண்டார்.

“அதன் பிறகு, என் விருப்பத்தை இயக்குநரிடம் தெரிவித்தேன். அப்படிதான் நான் தமிழ்த் திரையுலகில் என்னுடைய முதல் படத்தில் நடித்தேன்,” என்றார் அவர்.

இயக்குநர் மிஷ்கின், அவருடைய கதையின் நாயகி கதாபாத்திரத்திற்குத் தான் பொருத்தமாக இருப்பேன் என எண்ணி தன்னைத் தேடி அவர் கேரளா வந்ததாகவும் பாவனா கூறினார்.

பாவனாவின் தாய்மொழியான மலையாளத் திரையுலகில் நடித்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அத்திரையுலகில் இருக்கும் அனைத்து முன்னணி இயக்குநர்களிடமும் பாவனா பணியாற்றிருக்கிறார்.

“நான் மலையாளத்தில் முக்கியமான இயக்குநர்களான கமல், அமல் நீரத், அன்வர் ரஷீத் எனப் பலரோடு பணியாற்றிருக்கிறேன். தற்போது ‘ரேகாசித்திரம்’ படத்தில் கமலைப் பார்த்தபோது எனக்கே விந்தையாக இருந்தது.

“அவர்களிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள் தற்போது மலையாளத் திரையுலகில் முக்கிய இயக்குநர்களாக உள்ளனர். குறிப்பாக, முன்னணி இயக்குநர்களிடமிருந்து நாம் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“அவர்கள் அனைவரும் படப்பிடிப்பைச் சரியாகத் திட்டமிடுவர். ஒரு திட்டம் நன்றாகச் செயல்படவில்லை என்றால், அடுத்த திட்டம் கைவசம் வைத்திருப்பர்,” என முன்னணி இயகுநர்களின் திறமைகளை எடுத்துரைத்தார் பாவனா.

“மம்மூட்டியும் மோகன் லாலும் மலையாளத்தில் மிகப் பெரிய ஜாம்பவான்கள். அவர்களிடமிருந்தும் அறிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்கள் இருவரின் நேரம் தவறாமை, இயல்பாக நடிக்கும் திறன், படப்பிடிப்பின்போது நடத்துகொள்ள வேண்டிய முறை ஆகியவை இளம் நடிகர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

“அவர்களுடன் நடிப்பது பள்ளிக்கூடத்தில் இருப்பது போன்றுதான். தினமொரு பாடம். வாழ்க்கைக்கும் நடிப்புக்கும் தேவையானவற்றைக் கற்றுக்கொள்ளலாம்,” என அவர் சொன்னார்.

தெலுங்குத் திரையுலகில் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை எனக் கேட்டதற்கு, அங்கு நடிப்பதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் அந்தக் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

“அத்துறையில் கவர்ச்சி ஆதிக்கம் செலுத்தி வந்த காலம் அது. அவ்வாறு நடிக்க என்னால் முடியாத காரணத்தால், வாய்ப்புகள் கிடைத்தும் தெலுங்குத் திரையுலகில் நடிக்க மறுத்தேன்,” எனக் கூறி நேர்காணலை பாவனா நிறைவுசெய்தார்.

குறிப்புச் சொற்கள்