‘பிக்பாஸ்’ போட்டியில் வெற்றிபெற்ற ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’.
ராகவ் மிர்தா இயக்கி உள்ளார். இதில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிக்கா, சார்லி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
தமக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நெருக்கமானவர்களிடம் தெரிவித்தபோது எல்லாருமே வரவேற்றதாகக் குறிப்பிட்டார் பவ்யா திரிக்கா.
“எனது குடும்பம் நட்பு வட்டாரங்களில் எல்லா வயதைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அனைவருமே எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக தெரிவித்த கருத்துகளைக் கேட்டதும், மனத்தில் ஒருவித நேர்மறை உணர்வு ஏற்பட்டது. இப்படத்தின் கதை தனிப்பட்ட வகையில் எனக்கு மிக நெருக்கமானதாக இருந்தது. இயக்குனர் ராகவ் எதையும் நூறு விழுக்காடு துல்லியமாகச் செய்யக்கூடியவர். அதுதான் படத்தின் பலம் என்பேன்.
“நடிகர் சார்லியை திரையில் பார்க்கும்போதே ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். அவர் ஓர் ஆன்மிகவாதியும் கூட. அற்புதமான நடிகர்.
“சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி இருவருடனும் நடித்தபோது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையை கேட்டாலே எனக்குப் புல்லரித்துவிடும்.
“ராஜூவைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. நல்ல திறமைசாலி. அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது,” என்றார் பவ்யா.

