தன் மனைவி தொடர்ந்து பல்வேறு வகையில் மன உளைச்சலை ஏற்படுத்தியதால்தான், அவரை விட்டுப் பிரியும் முடிவை தாம் எடுத்ததாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
திருமணமாகி பத்து ஆண்டுகள் தங்கள் மண வாழ்க்கையில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் அதன் பிறகே தன் மனைவியின் போக்கால் பிரச்சினைகள் தொடங்கியது என்றும் ரவி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“என் பெயரிலும் எனது மனைவி பெயரிலும் மூன்று வங்கிக் கணக்குகள் உள்ளன. நான் எவ்வளவு பணம் எடுத்தாலும் அதுகுறித்த தகவல் என் மனைவி ஆர்த்திக்கு உடனடியாகச் சென்றுவிடும். ஆனால் அவர் பணம் எடுத்தால் எனக்குத் தெரியாது,” என்கிறார் ஜெயம் ரவி.
தாம் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது செலவுக்காக வங்கியில் இருந்து பணம் எடுத்தால், ‘எதற்காகப் பணம் எடுத்தீர்கள், அப்படி என்ன செலவு, பணத்தை என்ன செய்தீர்கள்’ என்று பலவிதமாக கேள்வி எழுப்புவாராம் ஆர்த்தி.
மேலும் கைபைகள், அழகு சாதனப் பொருள்கள் என்று ஆர்த்தி லட்சக்கணக்கில் பணம் செலவிட்டதாகவும், அதுகுறித்து தம்மால் எந்த கேள்வியையும் எழுப்ப முடியாத சூழலே இருந்தது என்றும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
“ஒரு கட்டத்துக்குப் பிறகு எனது உதவியாளர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் பணம் எடுத்தது, செலவிட்டது குறித்தெல்லாம் கேட்க ஆரம்பித்தார்.
“என்னிடம் மட்டும் கேட்டிருந்தால் இது குடும்பப் பிரச்சினையாக முடிந்திருக்கும். ஆனால் என் உதவியாளர்களிடம் கேட்டால் அவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள்.
“ஒருமுறை ஒரு பெரிய படத்தில் நடித்தபோது படக்குழுவுக்கு விருந்தளித்தபோது என்ன செலவானது, யார் யார் விருந்துக்கு வந்தார்கள் என்பது குறித்து உதவியாளர்களிடம் ஆர்த்தி விசாரித்தது மனதளவில் என்னை வெகுவாகப் பாதித்தது.
தொடர்புடைய செய்திகள்
“வெளியூர் படப்பிடிப்புகளின்போது எந்த தங்குவிடுதியில் இருந்தீர்கள், உங்கள் அறையில் யார் இருக்கிறார்கள் என்பதை இப்போதே கைப்பேசி காணொளி மூலம் காட்டுங்கள் என்றெல்லாம் அவர் கேட்கத்தொடங்கியது பெரும் அதிர்ச்சி அளித்தது. மனதளவில் பெரிதும் காயப்பட்டேன்.
“என் மாமியார் தயாரிப்பில் ‘அடங்க மறு’, ‘பூமி’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்துக் கொடுத்தேன். மூன்று படங்களும் வசூலில் தோல்வி கண்டதாகத் தெரிவித்தனர்.
“ஆனால் நான் கணக்கு பார்த்தபோது நல்ல லாபம் கிடைத்தது தெரிய வந்தது,” என்று ஜெயம் ரவி அப்பேட்டியில் கூறியுள்ளார்.
தாம் சம்பாதித்து வாங்கிய வீடு, நகைகள், கார்கள் ஆகியவை மனைவி ஆர்த்தி பேரில்தான் இருப்பதாகவும் ஆர்த்தி வீட்டிலுள்ள சிலருக்கு கிடைக்கும் மரியாதைகூட தமக்கு இல்லை என்றும் ஜெயம் ரவி கூறியுள்ளார்.
“வீட்டுப் பணியாளர்கள் முன்னால் கோபமாகப் பேசுவது, சண்டை போடுவது என இருந்தால் யார்தான் பொறுத்துக்கொள்வார்கள்.
“அதனால்தான் பிரியும் முடிவை எடுத்தேன்,” என்று தனது பேட்டியில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் ஜெயம் ரவி.

