தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.
அழகிய லைலாவான ரம்பாவிற்கு, 90களில் தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.
இன்றளவும் கூடப் பலருக்கும் பிடித்தமான நடிகையாக அவர் திகழ்கிறார்.
அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்த பெருமை அவருக்கு இருக்கிறது. ரம்பாவின் தனிச் சிறப்பே நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்துவது தான்.
குறிப்பாக, சுந்தர். சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, மணிவண்ணன் உள்ளிட்டோருடன் ரம்பா நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் அவரது கலைப்பயணத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
கமல்ஹாசனுடன் காதலா, காதலா, ரஜினிகாந்துடன் அருணாச்சலம், விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களிலும் அவரின் நடிப்பு பேசப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தார்.
கனடாவில் வசித்து வந்த அத்தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இச்சூழலில் நடிகை ரம்பா சின்னத்திரை மூலம் மீண்டும் திரைத்துறையில் நுழைந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக ரம்பா இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாகத் திரையுலகைவிட்டு விலகி இருந்ததற்கான காரணத்தை நடிகை ரம்பா தற்போது தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர்,“எனக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்தபோது, என் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை, குறைந்தபட்சம் தாய், தந்தை இருவரில் ஒருவராவது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால் தான் நான் திரைத்துறையைவிட்டு சில ஆண்டுகள் விலகி இருந்தேன்.
“இருப்பினும் நடிப்பின்மீது எனக்கு இருந்த ஆர்வம் கொஞ்சம் கூடக் குறையவில்லை. என்னுடைய முதல் காதல் எப்போதுமே திரைத்துறைதான்,” எனத் தெரிவித்துள்ளார்.

