ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் அனிருத்.
தமது இசையால் பல படங்களை வெற்றியடையவும் வைத்துள்ளார்.
அந்தளவிற்கு தென்னிந்தியாவின் முக்கியமான இசையமைப்பாளராக உலாவரும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி அப்படம் திரையிடப்படுகிறது.
அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் ‘கூலி’ படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அப்படத்தின் விளம்பரத்திற்காக அவர் சில நேர்காணல்களை வழங்கியுள்ளார்.
தாம் இசையமைத்திருக்கும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னால் அதுகுறித்து சில சுவாரசியமான தகவல்களை வெளியிடுவது அனிருத்தின் வழக்கம்.
அவரின் விமர்சனத்தைப் படிக்க பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அண்மை காலமாக அந்தப் பழக்கத்தை அனிருத் முழுமையாகத் தவிர்த்துவிட்டார்.
அதுதொடர்பாக நேர்காணல் தொகுப்பாளர் கேட்டபோது, “அதை நான் நிறுத்திவிட்டேன். நமக்கே சில திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றியடையாது எனத் தெரியும்போது, அதுகுறித்து படக்குழுவே விமர்சித்தால் அது தவறாகிவிடும்,” என்றார்.
“அதுமட்டுமன்றி, அனிருத் இந்தப் படத்திற்கு என்ன பதிவு போடப்போகிறார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு எனக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தருகிறது. மேலும், நான் பதிவு போடவில்லை என்றால், அப்படம் ரசிக்கும் வகையில் இல்லையோ எனும் எதிர்மறையான சிந்தனை ரசிகர்களின் மனத்தில் எழுகிறது,” என படங்கள் குறித்து விமர்சனங்கள் வெளியிடாதற்கான காரணங்களை அவர் விவரித்தார்.