‘அமரன்’ படம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, தமக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார் நடிகர் லல்லு.
பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் இவரை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இந்நிலையில், ‘அமரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ரவிசங்கர் கதாபாத்திரம் லல்லுவை அனைவருக்கும் அடையாளம் காட்டியுள்ளது. கடன் வாங்கி இந்தப் படத்தில் நடித்ததாகக் கூறி, கூடுதலாக வியக்க வைக்கிறார்.
‘அமரன்’ இறுதிக்காட்சியில் முகுந்த் வரதராஜன், ரவிசங்கரிடம் இறுதியாகப் பேசுவார். ரசிகர்களைக் கலங்கடித்த இக்காட்சியில் நடித்தபோது தன் மனம் கனத்துப்போனதாகச் சொல்கிறார் லல்லு.
இதற்கு முன்பு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் ‘ரங்கூன்’ படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். எனினும் அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் அமையவில்லையாம்.
“இப்போது மீண்டும் ‘அமரன்’ படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார். ‘சர்தார்’, ‘கைதி’ என நான் நடித்த பல படங்கள் தீபாவளிப் பண்டிகையின்போது வெளியாகி உள்ளன. எனினும் ‘அமரன்’ படம்தான் எனக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
“பல படங்களில் கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், யாருக்கும் என்னைப் பெரிதாகத் தெரியாது. ‘அமரன்’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்கூட மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதைக் கேள்விப்படும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.
“இதுதான் என் முதல் படம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது,” என்று நெகிழ்கிறார் நடிகர் லல்லு.
‘கொவிட் 19’ தாக்குதலுக்குப்பிறகு இவர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டாராம். வேறு ஏதாவது துறையில் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க வேண்டி இருந்தது. ஆனால், அந்தச் சமயத்தில்தான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ‘அமரன்’ படம் குறித்து விவரித்தாராம்.
தொடர்புடைய செய்திகள்
“கதைக்களம் காஷ்மீர் என்பதால் அங்கு போக வேண்டியிருக்கும் என்று இயக்குநர் கூறியிருந்தார். அங்குள்ள குளிரைத் தாங்க சில பொருள்கள் தேவைப்படும் அல்லவா?
“ஆனால் என்னிடம் காசு, பணம் எதுவுமே இல்லை. எல்லோரும் கடன் வாங்கி படிக்கப்போவார்கள் என்றால், நான் கடன் வாங்கி இப்படத்தில் நடிக்கப்போனேன்.
“சினிமா உலகில் இருக்கும்போது சரியாகப் பணம் கிடைக்காது. நிலையான பொருளாதாரமும் இருக்காது என்பார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் இந்தப்படத்தில் நடிக்கச் சென்றேன். இன்று எனது திரைப்பயணத்தின் இரண்டாவது சுற்றை ‘அமரன்’ படம் தொடங்கி வைத்துள்ளது.
இறுதிக்காட்சி உங்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
“அனைவருக்குமே உயிர் என்பது மிகவும் முக்கியம். சிலர் அதை நாட்டுக்காகத் தியாகம் செய்கிறார்கள்.
“எனவே, அந்த இறுதிக்காட்சியில் உள்ள தருணம் மேஜர் முகுந்த் சாரின் குடும்பத்துக்கு எத்தகைய வலியைக் கொடுத்திருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.
“அச்சமில்லை அச்சமில்லை பாடலை, ராணுவ வீரர்கள் உணர்வுபூர்வமாக பாடுவது மிக வலிமையான செய்தியை ரசிகர்களுக்கு கடத்தக்கூடிய ஒரு காட்சி. நம்மால் அந்தக் காட்சியுடன் நிச்சயம் இணைய முடியும்.
“சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை மிக கடினமாக உழைத்தார். ஆனால், எதையும் காட்டிக்கொள்ளாமல் எங்களுடன் ஜாலியாக, இயல்பாகப் பேசுவார். ‘ரங்கூன்’ படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு என்னை வாழ்த்தினார்.
“காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்து விமானத்தில் திரும்பும்போது சிவாவும் உடன் இருந்தார். அப்போது, ‘வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும். நீங்கள் முன்பு ‘ரங்கூன்’ படத்தில் நடித்ததால் இந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது. இந்தப்படம் மூலம் மற்ற வாய்ப்புகள் தேடி வரும்’ என்றார்.
“ரங்கூன்’ போன்ற படங்களில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்தபிறகு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்களே என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எனக்கும் பல ஆசைகள் உண்டு. ஆனால், எப்படியாவது பிழைத்து, நிலைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் வரும்போதுதான் உண்மையான நிலை குறித்து நமக்குத் தெரிய வரும்.
“இப்போது கிடைத்த நல்ல வாய்ப்பு நிச்சயமாக திரையுலகில் எனக்குப் பல புதிய கதவுகளைத் திறக்கும் என நம்புகிறேன். ‘சங்கத் தமிழ்’ படத்தில் நடிக்கும்போது, ‘அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கப் பாருங்கள். ஏதாவது ஒரு பாதை உங்களுக்குப் பிறக்கும்’ என்று விஜய் சேதுபதியும்கூட அறிவுறுத்தினார்.
“இதுபோன்ற அன்பான வார்த்தைகள்தான் எனக்கு நம்பிக்கையூட்டி நடைபோட வைக்கின்றன,” என்கிறார் லல்லு.