நான் புதியவர்களை நம்புகிறேன்: கௌரி கிஷன்

2 mins read
7ce0755c-0e9c-4596-a1f8-339b32fe7566
கௌரி கிஷன். - படம்: ஊடகம்

நடிகை கௌரி கிஷன் நடித்துள்ள ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’.

செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி உள்ளது இந்தப் படம். இதில் மருத்துவராக நடித்துள்ளார் கௌரி கிஷன். நாயகனாக ஆதித்ய மாதவன் நடித்துள்ளார். ‘குற்றம் 23’ படத்திலும் இதுபோன்ற கதையமைப்பு இருந்தாலும், அதற்கும் இந்தப் படத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்காதாம்.

“இதுகுறித்து பலரும் விசாரித்துவிட்டனர். அப்படியும் சந்தேகம் போகவில்லை. இரண்டும் வெவ்வேறு கதைகள் என்பதுதான் சரி.

“பல தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் ‘96’ படத்தில் நான் நடித்த ‘ஜானு’ கதாபாத்திரத்தை மறக்கவே இல்லை. இன்றும் அதற்காக என்னைக் கொண்டாடி வருகிறார்கள். ஜானுவைவிட இன்னும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்,” என்கிறார் கௌரி கிஷன்.

அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்துக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

நிகழ்ச்சியின் முடிவில் கௌரி கிஷனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“எத்தனை படங்கள் நடித்தாலும் ‘96’ மாதிரியான படம் அடுத்து அமையவில்லையே?’ என்ற கேள்விக்கு சுவாரசியமாகப் பதிலளித்தார் கௌரி.

“உண்மைதான். ‘96’ ஒரு ‘கல்ட்’ (CULT) படம். எனக்குத் தெரிந்தவரை சில அற்புதமான படைப்புகளுக்கு அடையாளம், கால எல்லைகள் ஏதும் தேவையில்லை.

“அந்தப் படத்தில் நடித்ததால்தான் எனக்கு எதிர்பாராத அளவு அன்பும் ஆதரவும் கிடைத்திருக்கிறது. இப்போது வரை அவை நீடித்து வருகின்றன. அந்த வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.

“அதே நேரம் ஒரு நடிகையாக பல கதைகளில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் நிச்சயம் உண்டு. ஒரு நல்ல நடிகையாக வெற்றிபெற வேண்டும். அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

“விரைவில் வெளியாக உள்ள ‘அதர்ஸ்’ படத்தில் மருத்துவராக நடித்திருக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதற்காக மெனக்கெட்டிருக்கிறேன்.

“என்னைப் பொறுத்தவரை ஆசைப்படலாம், அதற்காகப் பேராசை கூடாது. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து ‘96’ படம் தந்த வெற்றியைத் தக்கவைக்க முயற்சி செய்வேன்,” என்றார் கௌரி.

‘புதுமுகத்துடன் இணைந்து நடிக்கிறீர்களே?’ என்ற அடுத்த கேள்விக்கு கௌரி அளித்த பதில், திரையுலகில் அவர் பக்குவப்பட்ட நடிகையாக உருவாகி உள்ளார் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.

“இந்தப் படத்தில் இவர் புதுமுக நடிகர் என்கிறீர்கள். நான் இப்போதுவரை அறிமுக நடிகையாகத்தான் உணர்கிறேன். இந்தத் துறைக்கு வந்தபோது, சில நடிகர்கள் எனக்கு அளித்த ஆதரவால்தான் என்னால் சில படங்களில் நடிக்க முடிந்தது.

“அது போலத்தான் புதிதாக இந்தத் துறைக்கு வருபவர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இதற்கு முன்னர் நான் நடித்த படங்கள் எல்லாம் புது தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டவை. எனவே, நான் புதியவர்களை நம்புகிறேன்,” என்றார் கௌரி கிஷன்.

குறிப்புச் சொற்கள்