விஜய்யின் தைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது: மடோனா

3 mins read
473f3c5f-1524-4102-8b09-0968b619bd4f
மடோனா செபாஸ்டியன். - படம்: ஊடகம்

‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தில் நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன், விஜய்யின் அரசியல் பிரவேசம் எனக்குப் பிடித்திருக்கிறது. தைரியமான மனிதர் என்று பாராட்டி இருக்கிறார்.

மலையாள ‘பிரேமம்’ படத்தில் மனதில் நின்று, ‘பவர் பாண்டி’யில் பரவசப்படுத்தி, ‘லியோ’வில் ஜொலித்து ரசிகர்கள் உள்ளத்தில் குடிகொண்டிருப்பவர் மடோனா செபாஸ்டின். இவர் தற்பொழுது ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் ஒரு சுற்று வர இருக்கிறார்.

மடோனாவிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு சிறிதும் தயங்காமல் சரமாரியாக பதலளித்தார் மடோனா.

பல நாள்கள் கழித்து ஒரு நகைச்சுவைப் படத்தில் நடித்துள்ளீர்களே?

ஆமாம். ‘ஜாலியோ ஜிம்கானா’ ஜாலியான படம். பல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நீங்களும் சிரித்து, ரசித்துவிட்டு திரையரங்கில் இருந்து திரும்புவீர்கள். படம் முழுவதும் நகைச்சுவையாக இருக்கும்.

பிரபுதேவாகூட நடித்த அனுபவம்?

எந்த தொந்தரவும் இல்லாத இனிமையான மனிதர் பிரபுதேவா. படம் முழுவதும் நானும் மூன்று பெண்களும் சேர்ந்து அவரைக் குழந்தைபோல் துாக்கிக்கொண்டு அலைவோம். மற்றதை எல்லாம் நீங்கள் படத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

சில படங்கள் நடித்தீர்கள். பின்னர் சிறு இடைவெளி எடுத்தீர்கள். நீங்கள் எப்படி படத்தைத் தேர்வு செய்கிறீர்கள்?

படத்திற்கு என்று என்னுடைய பங்களிப்பு ஏதாவது கண்டிப்பாக இருக்கவேண்டும். நல்ல கதை, நல்ல இயக்குநர். இதுதான் எதிர்பார்க்கிறேன். அதிக படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசை எனக்குக் கிடையாது.

சாய் பல்லவியும் நீங்களும் ‘பிரேமம்’ படத்தில் அறிமுகம் ஆனீர்கள். இப்போது ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை எல்லாரும் கொண்டாடுவது எப்படி இருக்கிறது?

ஒரு நடிகையாக அவர் மேல் எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. அவர் வளர்ச்சியைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நல்லா பாடுவீர்கள் என்று கேள்விப்பட்டோம். பிரபுதேவா படத்தில் ஒரு பாட்டு பாடி இருக்கலாமே?

படத்தில் நான் ஒரு பாட்டு பாடுவதாகத்தான் இருந்தது. நேரம் கிடைக்காமல் வேறு ஒரு பாடகி பாடினார். கண்டிப்பாக நீங்கள் நடிப்பில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இயக்குநர் சொல்லி விட்டார்.

விஜய், விஜய் சேதுபதி, தனுஷிடம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?

விஜய் சேதுபதி எப்படி எல்லோரிடமும் அன்பாகப் பேசுகிறார், செல்ஃபி எடுக்கிறார் என கற்றுக்கொண்டேன். விஜய் இயல்பாக நடனம் ஆடுகிறார். சண்டைக் காட்சியில் அதிவேகமாக சண்டை போடுவதை ஆச்சரியமாக பார்ப்பேன். தனுஷோட முதல் இயக்கத்தில் ‘பா.பாண்டி’ படத்தில் நடித்தேன். நடிகராகவும் இயக்குநராகவும் தனுஷைப் பார்த்து வியந்தேன்.

ஓய்வு நேரத்தை எப்படிக் கழிப்பீர்கள்?

கொஞ்சம் பாடுவது, கொஞ்சம் குத்துச்சண்டை கற்றுக் கொள்கிறேன். ஏதாவது தனித்திறனை தெரிந்து வைத்திருப்பேன். அதுதான் எனக்கு ‘லியோ’ திரைப்படம் வரை பயன்பட்டது.

விஜய் கூட நடித்து உள்ளீர்கள். அவர் அரசியலுக்கு வந்தது பற்றி உங்கள் கருத்து?

“ரொம்ப தைரியமான முடிவு என நினைக்கிறேன். அரசியல் பெரிய விஷயம். அதனை அவர் கையில் எடுத்து இருக்கிறார். அவரது தைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் மடோனா செபாஸ்டியன்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாவிஜய்