சென்னையில் இருக்கும் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை சமந்தா. பல்லாவரத்துப் பெண் எனத் தமிழ்த் திரையுலக ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவர், தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தமிழில் உச்சத்தில் இருக்கும்போதே தெலுங்குத் திரையுலகில் கால்பதித்து அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டியவர். நடிகர்களுக்கு இணையாக வெற்றிப் படங்கள் கொடுத்து வந்தார்.
அவரின் இந்த வெற்றிப் பயணம் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வாலும் நோயாலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அவை எல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்த சமந்தா, கடைசியாக ‘சிடாடல்’ எனும் இணையத் தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா அண்மையில் நேர்காணல் ஒன்று அளித்திருந்தார். அதில், அவரிடம் ஏன் தமிழ் படங்களில் இப்போது அதிகம் நடிப்பதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.
“நிறைய படங்கள் நடிப்பது எளிமையானது தான். ஆனால் இதுதான் எனது கடைசி படம் என்று என்னை யோசிக்க வைக்கும் அளவுக்கான படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” எனச் சமந்தா அந்த நேர்காணலில் தெரிவித்தார்.
“முக்கியமாக, அந்தக் கட்டத்தில்தான் நான் இருப்பதாக உணர்கிறேன். ஒரு நடிகையாக சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன். எனக்கு மனநிறைவு தராத படங்களில் எப்போதும் நான் நடிப்பதே கிடையாது,” என்றார் அவர்.
இது ஒரு பக்கம் இருக்க, மறுமுனையில் நடிப்பைத் தாண்டி வேறு பலவற்றிலும் சமந்தா கவனம் செலுத்திவருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் ‘பிக்கில் பால்’ விளையாட்டின் லீக் தொடர் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. மேசைப் பந்து, டென்னிஸ் ஆகிய இரு போட்டிகளையும் இணைத்து விளையாடுவது போன்று இருக்கும் அந்த விளையாட்டு.
சென்னை, டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், சென்னை பிக்கில் பால் அணியை சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடிகை சமந்தா வாங்கியுள்ளார்.
இவரைப்போல் இயக்குநர் அட்லீயும் பெங்களூரு அணியை விலைக்கு வாங்கியிருக்கிறார்.
அந்த அணிக்கு ‘சென்னை சூப்பர் சாம்ப்ஸ்’ எனப் பெயர் சூட்டப்பட்டு அந்த அணிக்கான ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை சமந்தா தங்கள் அணிக்கான பிரத்யேக ஆடையை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும், கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து பிக்கில் பால் விளையாடினார். “அணிகளுக்கான ஆடை அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல மாதங்கள் இந்த பணிக்காக திட்டமிட்டு இருந்தேன்,” என அந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.
மேலும், “சென்னைக்கு நடிகையாக வராமல் ஒரு தொழில் முனைவராக வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால் சென்னைக்கு வரும்போதெல்லாம் சவுகரியமாக உணர்கிறேன். சென்னை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது,” என்றார் சமந்தா.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீயும் கலந்துகொண்டார். அவருடைய குழந்தையை வாஞ்சையோடு அணைத்துக்கொண்ட சமந்தா பிறகு அட்லீயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது அவரைப் பார்த்து, இந்த மன அழுத்தம் உங்களுக்குத் தேவையா? எனத் தனக்கு இணையாக ‘பிக்கில் பால்’ விளையாட்டு அணியை அட்லி வாங்கியிருப்பது குறித்து சமந்தா விமர்சித்தார். இதுதொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி பரவலாகி வருகிறது.