உள்மனம் சொல்வதைக் கேட்பேன்: தீப்ஷிகா

2 mins read
b13219eb-df3b-4809-b697-19470d162b5c
தீப்ஷிகா. - படம்: முகநூல், தீப்ஷிகா
multi-img1 of 2

இளம் சினிமா ரசிகர்களுக்கு தீப்ஷிகா குறித்து அறிமுகம் தேவையில்லை. விஜய் ஆண்டனியுடன் ‘மார்கன்’ படத்தில் நாயகியாக நடித்தவர். அடுத்து அண்மையில் வெளியான ‘மார்க்’ படத்தில் நடித்துள்ளார்.

ஜூன் 27ஆம் தேதி இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாம். அன்றுதான் ‘மார்கன்’ படம் வெளியானது.

தற்போது வெளியான ‘மார்க்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அன்றுதான் வந்தது என்கிறார் தீப்ஷிகா. ‘மார்க்’ படத்தில் இவரது நடிப்புக்கு உண்மையாகவே விமர்சகர்கள் நல்ல மதிப்பெண்களை வழங்கியுள்ளனர்.

“எனக்கு அழுத்தமான கதாபாத்திரம் அமைந்தது. ‘மார்க்’ படத்தைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். வழக்கமாக கதாநாயகிக்கு என வகுக்கப்பட்டுள்ள இலக்கணத்தை மீறி எழுதப்பட்ட வேடம் என்றும் கூறலாம்.

“திரையுலகில் எல்லா நடிகைகளுக்கும் இப்படிப்பட்ட வாய்ப்புகள் அமைவது அரிது. எனக்கு வாய்த்தது நான் செய்த புண்ணியம்.

இந்த வேடத்தை அளித்த இயக்குநர் விஜய் கார்த்திகேயாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்,” என்கிறார் தீப்ஷிகா.

இவர் அடுத்து தெலுங்கில் ‘ரமணி கல்யாணம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது தன் மனத்துக்கு நெருக்கமான படம் என்றும் சொல்கிறார். இது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்பாக இருக்குமாம்.

திரையுலகில் அடியெடுத்து வைக்கும் முன்னர், ரஜினியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்பதே தீப்ஷிகாவின் கனவாக இருந்துள்ளது. அது எப்போது நடக்கும் என்பது தெரியாது என்றாலும், அது நடந்தாலே போதும் மகிழ்ச்சிதான் என்கிறார்.

“தற்போது வாய்ப்பும் நேரமும் கிடைக்கும் போதெல்லாம் நிறைய திரைப்படங்கள் பார்க்கிறேன். மடோன் அஸ்வின் இயக்கிய ‘மண்டேலா’ படம் மிகவும் பிடிக்கும். அவரது படைப்புகளில் நல்ல கதைகளை எதிர்பார்க்கலாம். நகைச்சுவையும் தரமாக இருக்கும். அதுபோன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

“இன்றைய தேதியில் ஒரு நடிகையின் வெற்றி அவ்வளவு எளிதல்ல. வெற்றியின் ரகசியம் என்னவென்று யாராவது கேட்டால் சிரிப்புத்தான் வரும். ‘ஒருவேளை உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்’ என்பதே எனது பதிலாக இருக்கும்.

“சில சமயங்களில் நான் எடுக்கும் முடிவு தவறாக முடியக்கூடும். அதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்வோம். எல்லாமே கற்றதற்கான அனுபவம்.

“என்னைப் பொறுத்தவரை உள்மனம் என்ன சொல்கிறது என்பதைக் கேட்பேன். அது சரி என்று சொன்னால் தொடர்ந்து முன்னேறு என்று அர்த்தம். பாதிப்பு அதிகமாக இருக்கும் எனில் அதை விட்டுவிட வேண்டும். இது சினிமாவுக்கு மட்டுமல்ல. எந்த வேலைக்கும் பொருந்தும்,” என்று சொல்லும் தீப்ஷிகா, ஓய்வு நேரங்களில் கிடார் இசைக்க கற்று வருகிறார்.

“நான்கைந்து பொழுதுபோக்குகளாவது இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கிடார் வாங்கினேன். ஆனால், சில நாள்களிலேயே அது வீட்டில் ஒரு மூலையில் தூங்கியது. நண்பர்கள் இதைச் சுட்டிக் காட்டியதும் மீண்டும் வாசிக்கத் தொடங்கி உள்ளேன்.

“என்னுடைய அடுத்த பேட்டி வெளிவருவதற்குள் கிடார் வாசிக்க கற்றுக்கொள்வேன்,” என்கிறார் தீப்ஷிகா.

குறிப்புச் சொற்கள்