சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகிறது.
அதனால் 2026ஆம் ஆண்டு பொங்கல் போட்டியில் வெல்லப்போவது விஜய்யா அல்லது சிவகார்த்திகேயனா என்ற விவாதம் இப்போதே திரையுலகில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா ரஜினிகாந்தை வைத்துப் படம் இயக்கும் தனது நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “சிவகார்த்திகேயனிடம் நான் முதலில் கூறியது ஒரு காதல் கதைதான். ஒரு முன்னணி நடிகரை வைத்து, முழுக்க முழுக்க ஒரு காதல் காவியத்தைப் படைக்க வேண்டும் என்பது எனது கனவு.
“நான் அந்த முன்னணி நடிகரின் தீவிர ரசிகை. அவர் வேறு யாருமல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துதான். அவரை வைத்து ‘முதல் மரியாதை’ பாணியில் ஓர் அழுத்தமான காதல் படத்தை இயக்க வேண்டும் என்பது என் ஆசை.
“அந்தப் படத்துக்கான கதைக்களம் என்னிடம் உள்ளது. அதை முழுமையாகத் திரைக்கதையாகத் தயார் செய்ய வேண்டும். காதல் கதை மட்டுமின்றி அனைத்து விதமான படங்களையும் இயக்க எனக்கு விருப்பமுள்ளது. ஆனால், உண்மையைச் சொல்லப்போனால் நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன்.
“விரைவில் சினிமாவிலிருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளேன். அந்த ஓய்வுக்கு முன்பாக, எனக்கு மிகவும் பிடித்த நடிகரான ரஜினியை வைத்து இந்தக் கதையை எப்படியாவது இயக்கிவிட வேண்டும்,” என்று சுதா கொங்கரா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

