தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்: பிரீத்தி

2 mins read
9d17d9db-7ff7-4613-a300-49ae4b59ed6c
 பிரீத்தி முகுந்தன். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகின் இளம் ரசிகர்களுக்கு பிரீத்தி முகுந்தனை நிச்சயம் தெரிந்திருக்கும்.

சாய் அப்யங்கரின் ‘ஆசைகூட’, கவினின் ‘ஸ்டார்’ திரைப்படம் ஆகியவற்றில் நடித்து கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.

சொந்த ஊர் திருச்சி என்றாலும், சினிமா வாய்ப்புகளுக்காக தற்போது சென்னையில் தங்கியுள்ளார் பிரீத்தி.

தெலுங்கு, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நல்ல வாய்ப்புகளைத் தேர்வு செய்து நடிக்கும் இவர்தான் ‘இதயம் முரளி’ படத்தின் கதாநாயகி.

நடிப்பில் மட்டுமல்லாமல், படிப்பிலும் பிரீத்தி படுசுட்டியாம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றான ‘என்ஐடி’யின் முன்னாள் மாணவி.

ஏறக்குறைய 14 லட்சம் பேர் எழுதிய நுழைவுத்தேர்வில், 5,386ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்று, திருச்சி ‘என்ஐடி’யில் சேர்ந்துள்ளார்.

“நான் புத்திசாலி மாணவியா என்பது தெரியாது. ஆனால், நன்றாகப் படித்தால்தான் இதுபோன்ற உயர் கல்வி நிலையங்களில் சேர முடியும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பல நாள்கள் இரவுத் தூக்கத்தைத் தொலைத்து படித்ததால்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.

“நடிகையானது தற்செயலாக நடந்த ஒன்று. எனக்கு ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு அதிகம். என் தோழிகள் பலரும் நீ ‘மாடலிங்’ செய்கிறாரா என்று கேட்பார்கள். அதனால் அந்தத் துறையில் வாய்ப்புகளைத் தேடியபோது, ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

“சில விளம்பரங்களில் நடித்த பிறகு, கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன. ‘நடித்துத்தான் பார்ப்போமே’ எனத் தொடங்கி, இப்போது முழுநேர நடிகையாக மாறிவிட்டேன்,” என்று சொல்லும் பிரீத்திக்கு, தமிழில் ‘ஸ்டார்’ படத்தின் மூலம் அறிமுகமானபோது, திரைத்துறை குறித்து எதுவுமே தெரியாதாம்.

‘மாடலிங்’ துறைக்கும் சினிமாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறுபவர், திரைத்துறை தமக்கு நிறைய கற்றுக்கொடுத்ததாகச் சொல்கிறார்.

“விளம்பரங்களில் நடிக்கும்போது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து நாலு வார்த்தைகள் பேசி, அழகான முகபாவனைகளை வெளிப்படுத்தினால் போதும். ஒருசில நளினமான நடன அசைவுகளும் கைகொடுக்கும்.

“ஆனால், திரைப்படம் அப்படிப்பட்டதல்ல. நமக்கான கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி, அதுவாகவே நாம் மாற வேண்டும். எதார்த்தமாகவும் மிகைப்படுத்தாமலும் ரசிகர்களைக் கவரும் வகையில் நடிக்க வேண்டும்.

“அந்த வகையில், நிறைய கற்றுக்கொண்டேன். திரைப்படம் எடுப்பது எவ்வளவு கடினமான பணி, எத்தனை பேரின் உழைப்பு அதில் உள்ளது என்பதெல்லாம் இப்போதுதான் தெரிய வந்தது,” என்று சொல்லும் பிரீத்தி, அதர்வா ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடிக்கிறார்.

அதர்வாவின் நடிப்புக்கு தாம் ரசிகை என்றும் அவர் நல்ல நண்பரைப் போல் பழகுகிறார் என்றும் சொல்கிறார்.

இந்தப் படத்தில் கயாது லோஹரும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்களாம்.

“சினிமாவைத் தவிர, நடனத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. சிறு வயது முதலே பரதநாட்டியம் கற்று வருகிறேன். வித்தியாசமான நடனங்களை ஆடுவதில் எனக்கு விருப்பம் உண்டு. கல்லூரி நாள்களில் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் உண்டு. நடனத் துறையில் சாதிக்க விரும்புகிறேன்.

“சாகசப் பயணங்களும் பிடிக்கும். திரைத்துறையில் படத்தொகுப்பு, ‘ஸ்டைலிங்’ ஆகியவற்றில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்,” என்கிறார் பிரீத்தி முகுந்தன்.

குறிப்புச் சொற்கள்