தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, திருமணம் குறித்து அண்மையில் அளித்த ஆழமான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளன.
விஜய் தேவரகொண்டாவுடனான அவரது உறவு, நிச்சயதார்த்தம் குறித்த வதந்திகள் நிலவும் சூழலில், அவரது இந்த வெளிப்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
‘ஜயம்ஞ்சு நிஷ்சயம் அம்பு ரா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, “திருமணம் என்பது நீயே என் சூரியன், நீயே என் சந்திரன் என்று சொல்லும் நாள்கள் போய்விட்டன. இப்போது திருமணம் என்பது இருவர் ஒருவராகும் ஒரு பயணம்.
இந்தப் பயணத்தில் அழுத்தம் இருக்கக் கூடாது என்றும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, மதித்து, அன்புடன் பயணிக்கும்போதே உண்மையான திருமணம் சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், திருமணம் என்பது மோதிரங்களை மாற்றிக்கொள்வது மட்டுமல்ல; இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை, பாசம், நம்பிக்கை, தனிப்பட்ட இடம் வழங்குவது அவசியம். அன்புடனும் நட்புடனும் புரிதலுடனும் மட்டுமே இருவர் ஒருவராக முடியும் என்றார்.
அவர் பேசியதும் அரங்கில் கைதட்டல்கள் நிறைந்தன. ஏனெனில், பொதுவாக திரைத்துறையில் உள்ள நடிகைகள் இத்தகைய ஆழமான கருத்துகளை வெளிப்படுத்துவது அரிது. ரஷ்மிகாவின் இந்த வார்த்தைகள் அவரது ஆளுமையையும் சிந்தனை முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன.
இதற்கு முன்னர் ஒரு நேர்காணலில், தனக்கு உலகமே எதிராக இருந்தாலும் தன்னைப் புரிந்துகொண்டு, உணர்வுகளை மதித்து, தனக்காக நிற்கும் ஒருவரே வாழ்க்கைத்துணையாக வேண்டும் என்று ராஷ்மிகா கூறியிருந்தார்.
இந்தக் கருத்துகள் வெளிப்படையாக விஜய் தேவரகொண்டாவைப் பற்றியதுதான் என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
நிச்சயதார்த்தம் குறித்த வதந்திகளுக்கு, “நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவே உண்மை. நேரம் வரும்போது சொல்வேன்,” என்று ராஷ்மிகா கூறியது குறிப்பிடத்தக்கது.
அன்பு என்பது மரியாதை, திருமணம் என்பது சமத்துவம், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுதான் உண்மையான உறவு என்பதை ரஷ்மிகா தனது வார்த்தைகளால் நிரூபித்துள்ளார்.
அவர் வெளிப்படுத்திய சிந்தனைமிக்க வார்த்தைகள் இளைஞர்களைக் கவர்ந்துள்ளன. தற்போது இந்தக் கருத்துகள் இணையத்தில் பரவி வருகின்றன.

