சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்பினேன்: துஷாரா

சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்பினேன்: துஷாரா

2 mins read
b630c00a-3037-42fe-98ee-5b15f4c2fea5
துஷாரா விஜயன். - படம்: ஃபெமினா
multi-img1 of 2

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்துள்ளார் துஷாரா விஜயன்.

அவர் தற்போது ‘எக்ஸாம்’ என்ற இணையத்தொடரில் நடித்துள்ளார்.

புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம்’ தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் துஷாரா விஜயன்.

தனது அறிமுகத் திரைப்படமான ‘சார்பட்டா பரம்பரை’ நேரடியாக ‘அமேசான் ஓடிடி’ தளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், இப்போது தனது இணையத்தொடர் அறிமுகமும் அதே தளத்தில் அமைந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருவதாகச் சொன்னார்.

“இந்தத் தொடரில் நான் ஏற்றுள்ள ‘ஜான்சி’ என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் சற்று கடினமானது. வெளியே பார்க்க மிகவும் கண்டிப்பானவளாகவும் பலமானவளாகவும் தெரிந்தாலும் அவளுக்குள் ஒரு மென்மையான பக்கம் உண்டு.

“காவல் அதிகாரியாக நடிக்கும்போது அந்த அதிகாரத் தோரணை இயல்பாக வர வேண்டும். அதே சமயம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நடிக்க வேண்டும். இந்தச் சவாலான கதாபாத்திரத்தை இயக்குநர் சற்குணம் மிக அழகாக வடிவமைத்திருந்தார்.

“இந்தத் தொடருக்காக நிறைய சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். படப்பிடிப்பின்போது நிறைய அடி வாங்கினேன். பல இடங்களில் காயங்களும் ஏற்பட்டன. ஆனால், அந்த வலிகளைத் தாண்டி அக்காட்சிகளில் நடிப்பதை நான் மிகவும் விரும்பினேன். சண்டைக்காட்சிகளை தினேஷ் மாஸ்டர் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

“தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை. நான் எப்போதும் வித்தியாசமான, பலதரப்பட்ட கதாபாத்திரங்களையே விரும்புகிறேன்.

“வாழ்க்கை என்பது கருப்பு வெள்ளை மட்டுமல்ல, சாம்பல் நிறமும் கலந்ததுதான். அந்த மாதிரியான கருத்துகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

“துஷாரா என்றாலே ‘சீரியஸ்’ ஆன கதாபாத்திரங்களைச் செய்பவர் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், ஒரு கலைஞராகப் நடிப்பிற்குத் தீனிபோடும் எந்தக் கதாபாத்திரத்தையும் செய்ய நான் தயார்.

“எனது வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது என் குடும்பம். நான் ஆறு மாதங்கள் வீட்டில் இருந்தாலும், என் பெற்றோர் அடுத்த படம் எப்போது என்று கேட்டு நெருக்கடி கொடுத்ததில்லை. அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை பெரியது. பள்ளி நாள்களில் நான் ஒரு சுட்டிப் பெண்ணாக இருந்தேன். இன்று சினிமா எனக்குப் பிடித்தமான இடமாக மாறியிருக்கிறது,” என்றார் துஷாரா விஜயன்.

குறிப்புச் சொற்கள்