‘ரெட்ரோ’ படத்தில் நடித்துத் தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்த பூஜா ஹெக்டே, ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாடி அவர்களைத் தன்வசமாக்கியுள்ளார்.
அண்மையில், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், தான் பெற்ற எதிர்மறை விமர்சனங்களால் மிகவும் பாதிக்கப்பட்டதாகப் பூஜா கூறினார்.
வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளைக் குறிவைத்து, அவர்களை அவமதிக்கும் வகையில் பணம் கொடுத்து எதிர்மறை விமர்சனங்களை வெளியிடுவது தமக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கும் தகவலாக இருந்தது என்றார் அவர்.
நம்மைக் கீழே தள்ள ஒருவர் முயற்சி மேற்கொள்கிறார் என்றால் நாம் அவர்களைவிட மேலே இருக்கிறோம் என்றே அர்த்தம் எனக் கூறிய பூஜா, முதலில் அவற்றைப் பாராட்டாகவே எடுத்துக்கொண்டதாகக் கூறினார்.
மேலும், அச்செயலில் செயற்கை நுண்ணறிவு பெரிதும் பயன்படுத்தப்படுவதாகவும் இணையத்திலிருந்து அகற்ற அவற்றை வெளியிட்டவர்கள் தம்மிடம் பணம் கேட்டதாகவும் அவர் வேதனையுடன் சொன்னார்.
“இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்கள் காட்டும் தூய்மையான அன்பு மறைந்துவிடுகிறது. அவர்களின் அன்பே எங்களுக்கு வழங்கப்படும் உண்மையான அங்கீகாரம்,” என பூஜா ஹெக்டே கூறினார்.