மகிழ்ச்சி மழையில் நனைந்தேன்: சிம்ரன் நெகிழ்ச்சி

2 mins read
9339b7e3-8b7a-43c1-8b44-de1adce107b6
நடிகை சிம்ரன். - படம்: ஊடகம்

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் - சிம்ரன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் ரசிகர்களின் பெருவரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சாதித்தது.

ஐந்து வாரங்களைக் கடந்தும் சில திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நீண்ட நாளுக்குப் பிறகு மகிழ்ச்சி மழையில் நனைந்ததாக நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.

படத்தின் வெற்றி குறித்து சிம்ரன் அளித்துள்ள நேர்காணலில், “பொதுவாக என் பாத்திரத்துக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன்.

“இந்தப் படத்தை திரையரங்கில் போய் பார்த்தபோது ரசிகர்கள் தந்த ஆதரவைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன்.

“எந்த ஒரு படத்தில் நான் நடித்தாலும் அதற்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதும் இருக்கவேண்டும் என விரும்புகிறேன்.

“இந்தப் படத்தின் கதை நன்றாக இருந்ததால்தான் வெற்றி பெற்றது.

“நான் ஒரு படத்தில் நடிக்கும்போது முன்னணி நடிகர், வளர்ந்து வரும் நடிகர், பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. கதையையும் என் பாத்திரத்தையும்தான் பார்ப்பேன்.

“என்னிடம் கதையை எப்படிச் சுவாரசியமாகச் சொன்னாரோ அதேபோல் படத்தையும் இயக்குநர் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

“எல்லோரும் திரையரங்கில் சிரிக்கிறார்கள், அழுகிறார்கள்; உணர்வுபூர்வமாக படம் பார்ப்பதைப் பார்க்க முடிந்தது. இந்தக் காலத்தில் நடக்கும் நிகழ்வுகளின் உண்மைக் கதைதான் இந்தப் படம்,’’ என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சிம்ரன். திருமணம், குழந்தை என சிலகாலம் திரையுலகைவிட்டு விலகி இருந்த சிம்ரனுக்கு பதின்ம வயதில் மகன் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்