‘கற்றது தமிழ்’ ராம் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘பறந்து போ’ படம்.
‘மிர்ச்சி’ சிவா, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
வரும் ஜூலை 4ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது.
கதை நாயகன் ‘மிர்ச்சி’ சிவா பேசும்போது, ராம் இயக்கத்தில் நடிப்பது உறுதியானதுடன், மனத்திற்குள் பயத்தை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
“திடீரென ஒருநாள் தொடர்புகொண்டு பேசினார் இயக்குநர் ராம். தனது அடுத்த படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா எனக் கேட்டார்.
“தேர்வில் தோல்வி அடைந்த போதுகூட இந்த அளவுக்கு நான் பயந்தது இல்லை. ஆனால், ராம் இயக்கத்தில் நடிக்கப் போகிறோம் என்பதை நினைத்தபோது பயமாக இருந்தது,” என்றார் சிவா.
ராம் தம்மிடம் கொடுத்த கதையைப் படித்தபோது, மிகவும் சுவாரசியமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ராம் போன்ற இயக்குநர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்றார்.
“நான் ராம் போன்று அதிகம் படிப்பவன் அல்லன். ஒருவேளை படித்திருந்தால் அவரைப்போல் அறிவாளி ஆகியிருப்பேன்.
தொடர்புடைய செய்திகள்
“ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் ‘பறந்து போ’ படத்தை திரையிட்டபோது பெரிய கூட்டமே திரண்டு வந்தது. வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத வகையில் இந்தப் படம் அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது.
“அங்கு திரைத்துறையினர் பலரும் இயக்குநர் ராம் என்று திரையில் அவரது பெயர் காட்டப்பட்டபோது எழுந்து நின்று மரியாதையுடன் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
“திரு ராம் நமது சொத்து. அவரை அப்படியே விட்டுவிடக் கூடாது,” என்றார் மிர்ச்சி சிவா.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின், தாம் திரையுலகைவிட்டு விரைவில் விலகப்போவதாகக் குறிப்பிட்டபோது, அனைவருக்கும் அதிர்ச்சி.
“அண்மையில் ஓர் செய்தியாளர், ‘மிஷ்கின் விரைவில் முகவரி இல்லாமலேயே போய்விடுவார்’ எனக் கூறினாராம். அந்த நண்பரிடம் தாழ்மையாக நான் தெரிவிப்பது என்னவெனில், விரைவில் விலக வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.
“சினிமா உலகம் இப்போது மகிழ்ச்சியாக இல்லை. அந்தக் காலமெல்லாம் போய்விட்டது. இப்போது போட்டி அதிகமாகிவிட்டது, வியாபாரமும் அலைக்கழிக்கிறது.
“இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் நல்ல படைப்பு என்று சொல்வீர்கள். ஒருவேளை அப்படி இல்லையென்றால், படம் நன்றாக இல்லை என்று சொல்லுங்கள். ராம் தவறாக நினைக்க மாட்டார்,” என்றதும், அரங்கு சிரிப்பொலியால் நிறைந்துபோனது.