தமிழில் காதல் படங்கள் வெளியாவது குறைந்துவிட்டதாக நடிகர் கார்த்தி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
‘மிஸ் யூ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அதிகமான காதல் படங்கள் வெளிவர வேண்டும் எனத் தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, எம்.ராஜசேகர் இயக்கியுள்ள படம் ‘மிஸ் யூ’. வரும் 29ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பட நாயகன் சித்தார்த், ஆஷிகா, பால சரவணன், கருணாகரன், பொன்வண்ணன், அனுபமா குமார், ரமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
“என்னை சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று பலரும் சொல்வார்கள். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. படித்துவிட்டு உதவி இயக்குநராக மணிரத்னத்திடன் தொழில் கற்க சேர்ந்தபோது நடிகர் சித்தார்த், சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் அவரிடம் இருந்தனர்.
“சினிமா குறித்து அவர்களுக்குத் தெரிந்திருந்த அம்சங்கள், அவர்கள் சினிமா குறித்து பேசுவது ஆகியவற்றைப் பார்த்தபோது மலைத்துப் போனேன். நமக்கு எதுவும் தெரியாமல் போய்விட்டதே என்றும் வருத்தப்பட்டுள்ளேன்,” என்றார் கார்த்தி.
ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டுமானால் நிறைய படங்களைப் பார்த்தால் மட்டும் போதாது என்று குறிப்பிட்ட அவர், நல்ல படைப்புகளைத் தர வேண்டுமானால் நிறைய படிக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“மணிரத்னத்திடம் எனக்கு முன்பு உதவி இயக்குநர்களாகச் சேர்ந்தவர்களுடன் நிறைய பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் உரையாடியபோது நான் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அதனால்தான் இன்று திரையுலகில் என்னால் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடிந்துள்ளது.
“இந்தப் படத்தின் தலைப்பு ‘மிஸ் யூ’ என்று உள்ளது. நம் இளையர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் ‘லவ் யூ’. அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் பதிவுகள் அனைத்துமே காதலுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால், நாமோ அதைக் கவனத்தில் கொள்ளாமல், அதிரடி ‘ஆக்ஷன்’ படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார் கார்த்தி.
விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ இவருக்கு மிகவும் பிடித்தமானதாம். அதேபோல் சித்தார்த் நடிக்கும் படங்களும் தமக்குப் பிடித்தமானவை என்றார்.
“‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், காதல் காட்சிகளை இப்போது திரையில் பார்த்தாலும் உற்சாகமாக இருக்கும். அந்தக் காட்சிகளைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் மிக சுவாரசியமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அது போன்ற படங்களுக்கு ரசிகர்களிடம் இப்போதும்கூட வரவேற்பு கிடைக்கும். அப்படிப்பட்ட படங்களை ரசிகர்கள் இப்போதும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நாம்தான் அவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை.
“பாய்ஸ்’ சித்தார்த் என்பதால்தான் அவர் மட்டும் இன்னும் காதலித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அவர் பார்ப்பதற்கும் அப்படித்தான் இருக்கிறார் என்பது அவருக்கே பெரிய வசதியாக உள்ளது. காதல் படங்கள் குறைந்துவிட்டது என்பதை இந்த மேடையில் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்,” என்றார் கார்த்தி.
மணிரத்னம் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருந்தபோதும் சித்தார்த் மற்றவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்ததாகவும் ஒரு கட்டத்தில் இதைக் தாங்க முடியாமல், ‘அவனை நடிக்க மட்டும் சொல்லுங்க’ என்று இயக்குநர் கூறியதாகவும் குறிப்பிட்டு, தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கார்த்தி.
“இப்போதும்கூட சித்தார்த் அந்த வேலையைத்தான் செய்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்பவர்களிடம், ‘விளக்கை இந்தப் பக்கம் திருப்புங்கள், அந்தக் கதவை மூடுங்கள்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்,” என்று கிண்டல் செய்த கார்த்தி, திடீரென ‘டேய் நீ கொஞ்ச நேரம் அமைதியா இருடா’ என்று சித்தார்த்தை நோக்கி கூறியபோது, அரங்கில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலை எழுந்தது.