இயக்குநர் கதையைச் சொன்னதும் குலைநடுங்கிப் போனேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர் கதையைச் சொன்னதும் குலைநடுங்கிப் போனேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

2 mins read
461a08ac-3e9a-4fd2-917e-612864c4d2c6
‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

நவம்பர் 21ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம்.

தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் இது.

வெளியீட்டுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அர்ஜுன் உள்ளிட்ட பலர், இப்படம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

தாம் நடிக்கும் ஒவ்வொரு படமும் தமக்கு முதல் படம் போன்றுதான் என்றார் நடிகர் அர்ஜுன்.

“இந்தப் படம் என் மனத்துக்கு நெருக்கமானது. நான் நிறைய அறிமுக இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அந்த வகையில் ‘ஜெண்டில்மென்’ படம்கூட அப்படித்தான்.

“ஒரு வகையில் இதில் ஒருவித சுயநலமும் இருக்கிறது எனலாம். முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள், முழு ஆற்றலுடன் செயல்படுவார்கள். வெற்றி பெற வேண்டும் எனும் வேகமும் அவர்களிடம் இருக்கும்.

“நான் பல படங்களில் நடித்திருந்தாலும், ‘தீயவர் குலை நடுங்க’ படம் தனித்துவமானது என்று தயக்கமின்றிக் குறிப்பிடலாம்,” என்றார் அர்ஜுன்.

அடுத்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தின் கதையை இயக்குநர் விவரித்தபோதே தனக்கு நடுக்கம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

“இது உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவான படம். கேட்பவரை நடுங்க வைக்கும் அளவுக்குத் திகிலான சம்பவத்தைக் காட்சிப்படுத்தி உள்ளனர். இது போன்ற உண்மைக்கதைகளுடன் ரசிகர்கள் தங்களை எளிதில் பொருத்திக்கொள்ள முடியும்.

“நயன்தாரா நடித்த ‘அறம்’, நான் நடித்த ‘க/பெ ரணசிங்கம்’ போன்ற படங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இத்தகைய படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

“அர்ஜுனுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். ‘ஜென்டில்மென்’ படம் தொடங்கி அவர் நடித்த பல படங்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன். உண்மையாகவே அவர் ஒரு ‘ஜெண்டில்மென்’தான்,” என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

குறிப்புச் சொற்கள்