நல்ல கதையில் நடிக்கக் காத்திருந்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

நல்ல கதையில் நடிக்கக் காத்திருந்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

2 mins read
94fb2f2c-3410-48e4-bd03-d867c092bf48
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஐஸ்​வர்யா ராஜேஷ். - படம்: எக்ஸ்/ஐஸ்​வர்யா ராஜேஷ்

ஐஸ்​வர்யா ராஜேஷ், நீண்ட இடைவெளிக்​குப் பிறகு தமிழில் நடிக்கும் படம், ‘அண்​டர் 18’. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார்.

‘எஸ்​ஆர் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்​பில் பி.ஜகதீஷ் தயாரிக்​கும் இப்​படத்​தில் கிச்சா சுதீப், விக்​ராந்த், கிஷோர், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிக்​கின்​றனர். இதில் முதன்மைப் பாத்​திரத்​தில் ஐஸ்​வர்யா ராஜே‌ஷ் நடிக்கிறார்.

“உண்மைக் கதையின் அடிப்​படை​யில் உரு​வாகும் படம் ‘அண்​டர் 18’. அக்கா - தம்​பி பின்​னணி​யில் நடக்​கும் கதை. இப்போதுதான் படம் தொடங்கியுள்ளது. மற்ற விவரங்​களை தற்போது சொல்ல இயலாது,” என்றார் ஐஸ்​வர்யா.

“என் தம்​பியாக கார்த்திகேயன் நடிக்கிறார். சுதீப் முக்​கிய​மான கதா​பாத்​திரத்​தில் வலம் வருகிறார். எனக்கும் அவருக்கும் இடையில் அதிகமான காட்​சிகள் உள்ளன. ஓசூர் பகுதி​யில் நடப்பது போன்ற படம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“படத்தின் கதை நன்றாக இருந்தால் அது மொழி தாண்டி எல்லாப் பகுதியிலும் உள்ள மக்களால் ரசிக்க முடிகிறது. அதனால் எல்லா மொழி பார்வையாளர்களுக்குமான படமாக ‘அண்​டர் 18’ தயாரிக்கப்படுகிறது,” என்று ஐஸ்​வர்யா தெரிவித்தார்.

“தமிழில் நடித்து ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது. அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்​தம் இல்​லை. நல்ல கதைகளுக்காகக் காத்​திருந்​தேன். நான் தொடர்ந்து நடித்த ஏழு, எட்டுப் படங்​கள், பெண்​ணியம் சார்ந்த கதைகளைக் கொண்​டது,” என்று ஐஸ்​வர்யா கூறினார்.

‘கனா’, ‘காக்​கா​ முட்டை’, ‘டிரைவர் ஜமு​னா’, ‘சொப்பன சுந்​தரி’, ‘கிரேட் இண்​டியன் கிச்​சன்’, ‘க/பெ.ரணசிங்​கம்’ எனத் தான் நடித்த பல படங்கள் நல்ல படங்​கள் என்று குறிப்பிட்ட அவர், “இன்​றைக்கும் அந்தக் கதைகளும் அதில் என் கதா​பாத்​திரங்​களும் பேசப்​படு​கின்றன. அதனால், வாய்ப்பு வழங்கப்படும் படங்​கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடி​யாது,” என்று ஐஸ்​வர்யா தெரிவித்தார் .

“நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்​கிறேன். அதனால் எனக்கு அதிகம் நேரம் தேவைப்​படு​கிறது. சினிமா எனக்கு ஒரு வாய்ப்​புக் கொடுத்துள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்த நினைக்​கிறேன். அதனால் நல்ல கதைகளுக்குக் காத்​திருக்​கிறேன்,” என்றார் ஐஸ்​வர்யா.

“தற்போது தெலுங்​கு மொழியில் நான்கு படங்​கள் நடிக்கிறேன். முன்னணி நடிகர்களான வெங்​கடேஷ் மற்றும் நாகார்​ஜுனா ஆகியோருடன் படங்களில் நடிக்கின்றேன். தமிழ் சினி​மா​ தான் எனக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. அதை விட்​டு​விட முடி​யாது, அதில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்,” என்று ஐஸ்​வர்யா செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்