‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘காட்டான்’ இணையத் தொடர்.
‘கடைசி விவசாயி’ படத்தை அடுத்து, மணிகண்டனும் விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்துள்ளனர்.
‘காட்டான்’ குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, இயக்குநர் மணிகண்டனின் அறிவாற்றல் தமக்கு எப்போதுமே வியப்பளிக்கும் என்றார்.
மணிகண்டன் ஒவ்வொன்றையும் பார்க்கும் கோணங்கள் மிக மிக வித்தியாசமாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
“கடந்த 18 ஆண்டுகளாக எனக்கு அவரைத் தெரியும். அவர் எழுதுவது எல்லாமே சுவாரசியமாக இருக்கும். இந்த இணையத் தொடர் உட்பட பல அற்புதமான படைப்புகளை வழங்கியுள்ளார்.
“இந்தத் தொடர் வெளியாவதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. நான்தான் ஆதரவு அளித்ததாக அவர்கள் கூறலாம். ஆனால், அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் இதற்கு முக்கியக் காரணம்.
“இது எனக்குத் தெரிந்து தமிழில் உருவான ஆகப்பெரிய இணையத் தொடர்,” என்றார் விஜய் சேதுபதி.
இதையடுத்துப் பேசிய விஜே பார்வதி, தாம் இதுபோன்ற தருணத்துக்காகத்தான் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் இந்த இணையத்தொடர் குறித்துத் தெரியவந்ததாம்.
இத்தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தன்னை அணுகியபோது அதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்றார் பார்வதி. எனினும், பிறகு தகவலை உறுதி செய்துகொண்டு மணிகண்டனிடம் பேசியுள்ளார். அவர், உடனே கிளம்பி உசிலம்பட்டிக்கு வருமாறு கூறினாராம்.
“நானும் புறப்பட்டுச் சென்றேன். நான் மதுரைப் பெண். கொஞ்சம் நவீன உடைகளை அணிவதில் விருப்பம் உண்டு. அந்தத் தோற்றத்துடன்தான் இயக்குநரைச் சந்தித்தேன். அவரோ, ஒப்பனை இல்லாத தோற்றத்துடன் வருமாறு கூறிவிட்டார். பிறகென்ன, சில நிமிடங்களில் என்னை அறவே மாற்றிவிட்டனர்.
“படத்தில் நான் ஏற்று நடித்த ‘லலிதா’ கதாபாத்திரத்தைத் திரையில் பார்த்தபோது, எனக்கே வியப்பாக இருந்தது. இது நான்தானா என்று நம்ப முடியாமல் திரையைப் பார்த்தேன். ஒருவேளை இந்தத் தோற்றம்தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.
“மணிகண்டனுடன் படப்பிடிப்பின்போது சினிமா, அரசியல், இலக்கியம் என்று அதிகம் பேசும் வாய்ப்பு அமைந்தது. அவர் சொல்லும் விஷயங்களை அவரது கோணத்தில் இருந்து பார்க்கும்போது வியப்பாக இருக்கும்,” என்றார் பார்வதி.

