தனிப்பட்ட வகையில் தாய்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகை ஷ்ருதி ஹாசன். ஆனால், ஊடகங்களும் விடாமல்
துரத்துகின்றனவாம்.
அங்கு இருந்தபடியே, அவர் அளித்த அண்மைய பேட்டியில் சாய் அப்யங்கருடன் இணைந்து பாடிய, ‘பவழமல்லி’ பாடல், திருமணம், தாய்மை, தனிமை எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார் ஷ்ருதி.
40 வயதாகும் ஷ்ருதி, இதில் சரிபாதி காலத்தைத் தனியாக வாழ்ந்தே கடந்துவிட்டார். எப்போதாவது தனிமை மனத்தை உறுத்தும்போது, யாராவது உடனிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றுமாம். ஆனால், அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த எண்ணம் மறைந்துபோகும் என்கிறார்.
“தனியாக, சுதந்திரமாக இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. அது எனக்கு ஒருவித சக்தியை, தெளிவைத் தந்துள்ளது.
“18, 19 வயதிலேயே தனியாக வசிக்கத் தொடங்கிவிட்டேன். ‘எனக்கு நான் முக்கியம்’ என்ற மனநிலை எப்போதோ வந்துவிட்டது.
“தான் என்ற அகந்தை, நான்தான் பெரியவள் என்ற மமதையுடன் இவ்வாறு கூறவில்லை. குடும்பத்துடன் சேர்ந்து வாழ்பவர்களுக்கும் என்றாவது ஒருநாள், ‘எனக்கான முடிவுகளை நானே எடுக்க வேண்டும்’ எனும் எண்ணம் தோன்றும் அல்லவா. அதையும் மனத்திற் கொண்டு கூட்டிக்கழித்துப் பாருங்கள், நான் சொல்வதில் உள்ள நியாயம் புரியும்,” என்று குறிப்பிட்டுள்ள ஷ்ருதி, தம்மிடம் உள்ள தெளிவும் துணிச்சலும் தந்தை கமல்ஹாசனிடம் இருந்து வந்தவை என்று கூறியுள்ளார்.
பெற்றோர் இருவருமே வீட்டில் அவ்வளவு கண்டிப்பு காட்ட மாட்டார்களாம். தனக்கும் தங்கை அக் ஷராவுக்கும் நிறைய சுதந்திரம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், திரையுலகில் தாம் அடியெடுத்து வைத்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைத்தால் வியப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“இத்தனை ஆண்டுகள் ஒரு துறையில் நீடிக்க ஒழுக்கம் தேவை. அதைக் கற்றுக்கொடுத்தது அப்பாதான். நமக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அதைத் தயங்காமல் சொல்ல வேண்டும் என்றும் நம்மை யாராவது குறைவாக எடைபோட்டு பார்த்தாலோ, பேசினாலோ அவர்களிடம் தயங்காமல் கேள்வி கேட்க வேண்டும் என்றும் அப்பாதான் கற்றுக்கொடுத்தார்.
“அப்பா கோபப்பட மாட்டார். அவர் சொன்னதை நாம் கேட்காமல் போனால்கூட ஏதும் சொல்ல மாட்டார். என்றாவது ஒருநாள், ‘அப்பா.. நீங்கள் சொன்ன அறிவுரையை நான் கேட்டிருக்க வேண்டும்’ என்று நான் வருத்தப்பட்டால், ‘பரவாயில்லை.. நீ சமாளித்துவிடுவாய்’ என்று நம்பிக்கையூட்டுவார். அதுதான் அப்பா,” என்று தந்தையைப் பற்றி பேசும்போதெல்லாம் நெகிழ்ந்து போகிறார் ஷ்ருதி.
தனது பெற்றோர் வசதியானவர்கள் என்றாலும் பிள்ளைகள் கேட்ட அனைத்தையும் வாங்கிக்கொடுத்து செல்லமாக வளர்க்கவில்லை என்றும் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்றும் பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார் ஷ்ருதி.
“இன்று என் வீட்டுக்கான மின் கட்டணத்தைச் செலுத்துவதில் தொடங்கி வீட்டுக்கான பொருள்களை வாங்குவது வரை, அனைத்து வேலைகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். எதையும் நம்மால் செய்து முடிக்க இயலும் என்ற மனப்பக்குவத்தை கொடுத்ததும் அப்பா எனக்குத் தந்த சுதந்திரம்தான்.
“எனக்கு சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். அதை மற்றவர்களுடன் பகிர்வது இன்னும் அதிகமாகப் பிடிக்கும். ஒருநாள் நான் செய்த சாம்பாரை அப்பாவுக்குக் கொடுத்தேன். அதை ருசித்துப் பார்த்த அவர், தன் அம்மா செய்வதுபோல் இல்லை என்று கூறிவிட்டார்,” என்று குறிப்பிட்டுள்ள ஷ்ருதி, சாய் அப்யங்கருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அருமையாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
“அண்மையில் வெற்றி பெற்ற பாடல்களில், ‘பவழமல்லி’தான் எனக்கும் பிடித்தமானது. பாடலைப் பதிவு செய்யும்போதே, ‘அட நன்றாக இருக்கிறதே’ எனத் தோன்றியது.
“நடிப்பு, இசை ஆகிய இரண்டில் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இரண்டும் அவசியம் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை எனச் சொல்வதைவிட, சுதந்திரமாக இருந்து பழகிவிட்ட எனக்கு, ஒருவிதப் பயம் என்று கூறலாம். அதேசமயம், எனக்கு தாய்மை மிகவும் பிடிக்கும். அதற்காக, தனித்து நின்று குழந்தை வளர்க்க விரும்பவில்லை.
“எனக்கு குழந்தைகளைத் தத்தெடுப்பதில் நம்பிக்கை உண்டு. எதிர்காலத்தில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் யோசனை உள்ளது,” என்கிறார் ஷ்ருதி.

