தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதில் சிறு வயது தனுஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாஸ்டர் தீகன்.
இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் தன் தாயாருடன் கலந்துகொண்டார் தீகன். அப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தீகனின் தாய், தான் கும்பிட்ட சிவனும் முருகனும்தான் தன் மகனுக்கு இந்த நல்ல வாய்ப்பைத் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தப் படத்திலும் என் மகன் பெயர் முருகன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. என் மகன் இனிமேல் நிறைய படங்களில் நடிக்கக்கூடும். ஆனால், ‘இட்லி கடை’ படம் அவனுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும்.
“எங்கோ ஓர் ஓரத்தில் இருந்த எங்களைக் கண்டுபிடித்து, இந்த வாய்ப்பைக் கொடுத்த தனுஷுக்கு நன்றி. என் உயிர் உள்ளவரை அவருக்கு நன்றியுடன் இருப்பேன்.
“என் மகனிடம், ‘நீ வளர்ந்து பெரிய ஆளாக உயர்ந்தாலும் அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்’ எனக் கூறியிருக்கிறேன்,” என்றார் தீகனின் தாய்.