தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிக்கும் பாத்திரமாகவே கரைந்து போவேன்: ஸ்ரீநிதி ஷெட்டி

3 mins read
fa0cd22f-5ed4-4795-8870-cb6f677a2ea0
 ஸ்ரீநிதி ஷெட்டி. - படம்: இன்ஸ்டகிராம்
multi-img1 of 2

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படம்தான் ஸ்ரீநிதி ஷெட்டியின் முதல் தமிழ்ப் படம். தற்போது நானி நடித்துள்ள ‘ஹிட் 3’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

படத்துக்கான வரவேற்பு நேர்மறையாக வந்துள்ளதால் ஸ்ரீநிதியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது.

இந்த மகிழ்ச்சியை தமிழக வார இதழ் ஒன்றுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நடிகர் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் நடித்துள்ளேன். அவருடன் நடித்தது என்றென்றும் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருடனும் நடிக்க வேண்டும்.

“இந்தியில் ஷாரூக் கானுடன் நடிக்கவும் ஆசை உள்ளது. சிறுவயதிலிருந்து நான் அவரது படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவேன்.

“பெரிய, முன்னணி நடிகர்களுடன் நடிக்கும்போது அழுத்தம் இருக்கும். இப்பொழுது நான் தினமும் யோகா பயிற்சி செய்கிறேன். அது எனது மன அழுத்தத்தைக் குறைப்பதற்குப் பெரிதும் உதவுகிறது,” என்கிறார் ஸ்ரீநிதி.

தனது மனத்தைத் தொடும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதாகக் கூறும் ஸ்ரீநிதி, திரையுலகில் தானும் ஓர் அங்கமாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார்.

அதுமட்டுமல்ல, ஒரு படத்தைத் தேர்வு செய்து நடிக்கும்போது அந்தப் பாத்திரமாகவே மாறிப் போய்விடுவேன்.

அத்துடன், இயக்குநர், நடிகர் என அனைவரோடும் புரிதலுடன் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பேன் என்றும் சொல்கிறார் ஸ்ரீநிதி.

‘மிஸ் கர்நாடகா’ அழகிப் பட்டத்தை வென்ற ஸ்ரீநிதிக்கு ‘கே.ஜி.எப்’ படம் பிரம்மாண்ட வாய்ப்புக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து ‘கே.ஜி.எப் 2’ படத்திலும் நடித்துக் கன்னடத் திரையுலகின் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்குப் பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

‘கேஜிஎப்’ படம் பெரியளவில் வெற்றிபெறும் என்றும் அந்தப் படத்தில் நானும் ஓர் அங்கமாக இருப்பேன் என்றும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

முதல் பாகம் பிரம்மாண்டமாக அமைந்ததால் எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்த பாகத்திலும் நடித்தேன். படம் பிடித்துப்போனதால் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

திரைத்துறைக்கு வந்தோமா, அடுத்தடுத்து நாலைந்து படங்களில் நடித்தோமா என்ற மனநிலை எனக்கு எப்போதும் இருந்ததில்லை.

சிறிய தொகையில் எடுக்கப்படும் படம், பெரிய தொகையில் எடுக்கப்படும் படம் என்றெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை.

என் பாத்திரத்தின்மீது ஒரு விழுக்காடு சந்தேகம் இருந்தாலும் அந்தப் படத்தை நான் ஏற்கமாட்டேன். அந்த முடிவை எனக்கான சுதந்திரமாகப் பார்க்கிறேன்.

கலைஞர்களின் வேலை கதை, பாத்திரத்துக்கு ஏற்ப நடிக்க வேண்டும் என்பதுதான்.

நானியுடன் நடிக்கும்போது பெரியளவில் மெனக்கெட வேண்டிய தேவை இருக்காது. கொஞ்சம் முயற்சி எடுத்து நடித்தால் போதும். அவரிடம் நிறைய நடிப்புக்கான நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.

‘கே.ஜி.எப்’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் என்னை சீதாவாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ஒரு பேட்டியில் கூறினேன். பலரும் அதைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள்.

சீதா பாத்திரத்துக்கான தோற்ற ஒத்திகையில் நானும் கலந்துகொண்டேன். அதன் பிறகு படக்குழுவிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

சீதாவாக சாய் பல்லவி நடிப்பதை ஊடகங்கள் வழியாகத் தெரிந்துகொண்டேன்.

ஆனால், எனக்குப் பதிலாக சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டதுபோல் செய்திகள் வெளிவந்தன. அது தவறு.

அதுமட்டுமல்ல, ‘கே.ஜி.எப்’ படத்தில் நாயகனாக நடித்த யஷ் இதில் ராவணனாக நடிக்கிறார். அவர் ராமனாகவும், நான் சீதாவாகவும் நடித்தால்தான் பொருத்தமாக இருந்திருக்கும். நான் சீதையாகவும் யஷ் ராவணனாகவும் நடிக்கும்போது அந்தத் தோற்றம் பொருத்தப்பட்டு வராது என தெளிவுபட சொல்கிறார் ஸ்ரீநிதி.

சமூக வலைத்தளத்தில் கன்னட திரை ரசிகர்கள் அதிகம் பின் தொடரும் நடிகைகளில் முதன்மையான இடத்தில் இருந்து வருகிறார் ஸ்ரீநிதி ஷெட்டி.

குறிப்புச் சொற்கள்