தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படங்கள் மூலம் அன்பைத் திருப்பிக் கொடுப்பேன்: ‘டிராகன்’ நாயகி

2 mins read
a1d51ca4-d841-4703-a57f-533f2ec65d5d
நடிகை கயாது லோகர். - படம்: இந்திய ஊடகம்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இம்மாதம் 21ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அதுமட்டுமன்றி, வசூல் ரீதியாகவும் விமர்சனங்கள் அடிப்படையிலும் இப்படம் வெற்றிப் படமாக திரையரங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கயாது லோகர், தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மக்களிடையே ஆழமாகத் தன்னை பதிவு செய்து, பல இளையர்களின் மனதை கொள்ளை அடித்திருக்கிறார்.

அவரது சில காணொளிகளும் புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில், கயாது லோகர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தப் பல்லவிக்கும் ‘டிராகன்’ படத்திற்கும் ரசிகர்கள் கொடுத்துவரும் அன்பும் ஆதரவும் மிகையான உணர்வைத் தருகிறது. திரையரங்குகளில் நீங்கள் எனக்காக அடிக்கும் விசிலும் இன்ஸ்டகிராமில் நீங்கள் எனக்காகப் பதிவிடும் காணொளிகளையும் கருத்துகளையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “நான் தமிழ்ப்பெண் அல்ல. எனக்கு தமிழ் மொழி தெரியாது. எனினும், நீங்கள் எனக்குக் கொடுக்கும் அன்பு விலை மதிப்பற்றதாக இருக்கிறது.

“நீங்கள் எனக்குத் தரும் அன்பை என்னுடைய படங்கள் மூலம் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். நீங்கள் பெருமைப்படும்படி நடந்துகொள்வேன்,” என நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார் கயாது.

அசாம் மாநிலத்திலுள்ள டெஸ்பூர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர் இவர். கல்லூரியில் பி.காம் இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, ‘மாடலிங்’ துறைமீது கொண்ட ஆசையால் தன் கவனத்தை அதன்பக்கம் திருப்பினார்.

அத்துறையில் இவருக்கு நல்ல அடையாளம் கிடைத்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ‘எவர்யூத் ஃபிரஷ் ஃபேஸ்’ (Everyuth Fresh Face) என்ற நிகழ்ச்சியின் 12வது சீசனின் வெற்றியாளராகவும் இவர் வலம்வந்தார்.

இந்நிகழ்ச்சி பலரின் திரையுலகக் கனவுக்கு முதல் புள்ளியாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில் கயாது லோகரின் திரைப்பயணத்திற்கு அச்சாரமிட்டதும் இந்நிகழ்ச்சிதான்.

2021ஆம் ஆண்டு ‘முகில்பேடே’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இவர் காலடி எடுத்துவைத்தார். இத்திரைப்படம் வெளியாகி ஓராண்டிற்குள்ளாகவே மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து வலம் வரத் தொடங்கினார்.

இதுமட்டுமல்ல, மராத்தி திரைப்படம் ஒன்றிலும் நடித்தார். ‘ஐ ஃப்ரேம் யூ’ என்ற அந்தப் படம் 2023ஆம் ஆண்டு வெளியானது.

பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் அவருக்கான இடத்தைப் பிடிப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்த கயாதுக்கு தமிழ் திரையுலகிலிருந்து அழைப்பு வந்தது.

அந்த வாய்ப்பை உறுதியாகப் பற்றிக் கொண்டு தற்போது ‘டிராகன்’ படத்தின் மூலம் தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

‘டிராகன்’ பட வெளியீட்டுக்கு முன்பே ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரனின் அதர்வா நடிப்பில் உருவாகும் ‘இதயம் முரளி’ படத்தில் நாயகியாக நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார் கயாது.

குறிப்புச் சொற்கள்