மறைந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா சுப்புலட்சுமி அம்மாபோல் வாழ்ந்து காட்ட உள்ளார்.
இந்திய இசை வரலாற்றில் ஒரு கர்நாடக இசைப் பாடகியாக மொழி, தலைமுறைகளைக் கடந்து அவரது இசை இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
அவரது வாழ்க்கையைத் திரைப்படமாக்க பல நிறுவனங்கள் முயற்சி எடுத்து வந்த நிலையில், சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் தொடக்க நிகழ்வில் தமிழில் பேசிய ராஷ்மிகா, “உங்கள் அனைவரின் முன்னிலையிலும் பேசுவது எனக்குப் பெருமையளிக்கிறது.
“அம்மாவின் வாழ்க்கையில் சிறிய பகுதியாக இருப்பதற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன்,” என்றார்.
அவரது குரலில் தனித்துவமான தெய்வீகச் சக்தி இருப்பதாக உணர்வதாகக் கூறிய ராஷ்மிகா, “கண்டிப்பாக என் சிறந்த பங்களிப்பைக் கொடுப்பேன்,” என உறுதியளித்தார்.
திருமணத்திற்குப் பின் கதைகளைக் கவனமாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் ராஷ்மிகா.
தனியாக நடிப்பது அல்லது பல நாயகிகள் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பது என தனது அடுத்தடுத்த படங்களின் பட்டியல் மூலம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
ஷாகித் கபூருடன் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘காக்டெயில் 2’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகி ஒடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘மைசா’ திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
சண்டைக் காட்சியில் நடித்தபோது காயமடைந்த அவர், ஆறேழு வார ஓய்விற்குப் பின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ள நிலையில், இப்படம் நவம்பரில் வெளியாகிறது.
இதற்கிடையே காதல் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள 1850களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘ரணபலி’ அடுத்த மாதம் வெளியாகிறது.
ராஷ்மிகா இதில் ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தில் நடிக்க, ‘தி மம்மி’ படத்தின் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’விலும் கௌதம் தின்னூரி இயக்கத்தில் உருவாகும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் சுப்புலட்சுமியாக ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிப்பது கடினம்: கமல்ஹாசன்
பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் தொடக்கவிழாவை நடிகர் கமல்ஹாசன் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய கமல்ஹாசன், “தென்னிந்திய சினிமா ஒவ்வொரு மொழியிலும் மாற்றம் செய்யவேண்டிய தேவையின்றி பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
“தென்னிந்திய சினிமாவுக்குச் சென்னை அடையாளமாக இருந்தது; அது இனி பெங்களூருவாகவும் ஹைதராபாத் ஆகவும் மாற வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னால் மீண்டும் அவ்வை சண்முகியாக நடிக்க முடியும்; ஆனால், என் தாடியை எடுத்தாலும் எம். எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க முடியாது. அதை ராஷ்மிகா மந்தனாதான் செய்ய வேண்டும்.
“சுப்புலட்சுமி போலவே நடிப்பது கடினம். நடிகை ராஷ்மிகா தனக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பிற்கு கடின உழைப்பைக் கொடுத்து நிரூபிக்க வேண்டும்,” என்றார்.
இப்படத்தைக் கௌதம் தின்னுரி இயக்க, அனிருத் இசையமைப்பில் அல்லு அரவிந்த் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.
முன்னதாக சாய் பல்லவி நடிப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தின் தலைப்பு, முதல் தோற்ற போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
