‘தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜிங்குச்சா’ பாடலுக்கு இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் பாடலுக்கு சிம்பு, கமலுடன் இணைந்து அழகாக, உற்சாகமாக நடனமாடியுள்ளார் சானியா மல்ஹோத்ரா.
இந்தியில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இளம் நாயகிகளின் பட்டியலில் இவருக்கும் நிச்சயம் இடமுண்டு.
காரணம், சானியா நடித்த படம் என்றால், ஒன்று வசூலை வாரிக் குவிக்கும். அல்லது சிறப்பான விமர்சனங்களைப் பெறும்.
“அதனால்தான் எங்கள் கனவு நாயகியை பாலிவுட் திரையுலகம் ‘அதிர்ஷ்ட தேவதை’ எனக் கொண்டாடுகிறது,” என்று சானியாவின் ரசிகர்கள் உற்சாகமாகக் கூறுகிறார்கள்.
சமூக ஊடகங்களில் ஏராளமானோர் இந்த இளம் நாயகியைப் பின்தொடர்கிறார்கள்.
அமிர் கானின் ‘தங்கல்’, ஷாரூக் கானின் ‘ஜவான்’ எனப் பல வெற்றிப் படங்களில் சானியாவைப் பார்க்க முடியும்.
ஒவ்வொரு படத்திலும் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் தனித்துவமாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
‘பதாய் ஹோ’, ‘ஃபோட்டோகிராஃப்’, ‘சகுந்தலா தேவி’, ‘லுடோ’ என இவர் நடித்த வெற்றிப் படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். தற்போது ‘Mrs’ படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.
கடந்த 1992ஆம் ஆண்டு, டெல்லியில் பிறந்த பஞ்சாபிப் பெண்ணான சானியா, டெல்லியில் பட்டப்படிப்பை முடித்த கையோடு, முறைப்படி பாலே நடனம் கற்றுக்கொண்டாராம்.
இதையடுத்து, இந்தி தனியார் தொலைக்காட்சியில் நடனம் தொடர்பான ‘ரியாலிட்டி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தார்.
பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்தவர், தொலைக்காட்சித் தொடர்களில் உதவி ஒளிப்பதிவாளராக சிலகாலம் பணியாற்றி உள்ளார்.
“அப்போதுதான் நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து, பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு அளிக்கும் முகேஷ் சப்ராவுடன் அறிமுகமானேன். அவர் மூலமாகத்தான் ‘தங்கல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
“குத்துச்சண்டை பற்றி எதுவுமே தெரியாத எனக்கு, அந்த வாய்ப்பு வியப்பளித்தது. எனினும், படத்தில் ஒப்பந்தமானது முதல் நிறைய குத்துச்சண்டைக் காணொளிகளைப் பார்த்து என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன்.
“முதல் படத்திலேயே பயமில்லா நடிகை என்ற பாராட்டும் கிடைத்தது. இரண்டு காதல் காட்சிகள், இரண்டு பாடல் காட்சிகள் என்று திரைத்துறையைக் கடந்துபோவதில் எனக்கு விருப்பம் இல்லை.
“அதனால்தான் சவாலான, நல்ல கதைகளாகத் தேடிப் பிடித்து நடிக்கிறேன்,” என்கிறார் சானியா மல்ஹோத்ரா.
இவரது தந்தை சுனில் மல்ஹோத்ரா பொறியாளர். அம்மா ரேணு ஆடை வடிவமைப்பாளர்.
சானியாவை கேள்விகளால் மடக்கிவிட முடியாது. காதல், மண வாழ்க்கை, பாலியல் தொல்லை, ஆன்மிகம் என எதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் வெளிப்படையாக, துணிச்சலாகப் பதில் அளிக்கிறார்.
இவர் ஒரு காஃபி பிரியை. எந்த ஊர், எந்த நாட்டுக்குச் சென்றாலும், அங்குள்ள காஃபியை ஒருமுறையாவது சுவைத்துவிடுவார்.
“நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நான், ஒரு பெரிய வீட்டைக் கட்டி, என் பெற்றோரை அங்கு குடிவைத்து அழகு பார்க்க விரும்பினேன்.
“என்னுடைய அந்த ஆசை கூடிய விரைவில் நிறைவேறப் போகிறது. மும்பை கடற்கரை சாலை அருகே புது வீடு கட்டி வருகிறேன்.
“மணிரத்னம் படம் மூலமாக தமிழுக்கு வந்திருக்கிறேன். தமிழ்த் திரையுலகில் என்னால் முத்திரை பதிக்கவும் சாதிக்கவும் முடியும் என நம்புகிறேன்,” என்கிறார் சானியா மல்ஹோத்ரா.

