நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா, அம்மா வழியைப் பின்பற்றி நடிகையாகிவிட்டார். அவர் நடிக்கும் முதல் படம் மலையாளத்தில் உருவாகிறது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம்வந்த குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சி.யைக் காதலித்து 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
குஷ்புவுக்குத் தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டி அன்பு மழை பொழிந்து, ‘குஷ்பு இட்லி’ என்று பெயர்சூட்டி மகிழ்ந்தனர்.
குஷ்புவின் இரு மகள்களான அவந்திகா, அனந்திகா ஆகிய இருவருக்குமே பெற்றோரைப்போல் திரைத்துறையில் ஆர்வம்.
அவந்திகாவுக்கு அம்மாவைப்போல் நடிகையாக ஆசை. அனந்திகாவுக்கோ அப்போவைப்போல் இயக்குநராக ஆசை.
இந்தத் தகவல் வெளியான அடுத்த நாள் முதலே சுந்தர்.சி, குஷ்பு இருவரின் கைப்பேசி எண்களை இடைவிடாமல் பலரும் தொடர்புகொண்டு, இது உண்மையா என விசாரித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தென்னிந்தியத் திரையுலகில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களாம்.
1988ல் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் குஷ்பு. ஏறக்குறைய 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான ‘ஆரம்பம்’ படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார்.
தமிழ், மலையாளம் என ஒரே நேரத்தில் இருமொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. அவருடன் சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
என்னதான் இளம் வயது, முன் அனுபவம் இல்லாதவர் என்றாலும் தனது திரைப்பயணத்தை அவந்திகாவே வடிவமைத்துக் கொள்ளட்டும் என்று முழு சுதந்திரம் அளித்துள்ளாராம் குஷ்பு.
கதை கேட்பது, படப்பிடிப்புக்குத் தேதிகளை ஒதுக்கித்தருவது, கதாபாத்திரங்கள் என அனைத்தையும் அவந்திகாதான் முடிவு செய்கிறார்.
“முதல்நாள் படப்பிடிப்புக்கும்கூட தனியாகத்தான் சென்றேன். அப்பா, அம்மா மீது அனைவரும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். முதல் நாளன்று படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கை தட்டி வரவேற்றனர். உற்சாகமாக இருந்தது,” என்கிறார் அவந்திகா.
இதோடு தமிழில் உருவாகும் ‘டபுள் ஆக்குபன்சி’ என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார். சினிமாவில் நடிக்க ஆசை என்று இவர் கூறியபோது, பெற்றோர் இருவருமே ஒரு வார்த்தைகூட எதிர்மறையாகச் சொல்லவில்லையாம்.
குஷ்பு மட்டும் தன் பங்குக்கு, “இது சாதாரண விஷயம் அல்ல. திரைத்துறையில் எதுவும் தேடி வராது. கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கொள்,” என்று அறிவுரை கூறியுள்ளார்.
“அதன்பிறகு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். நிறைய உடற்பயிற்சி செய்கிறேன். அம்மாவின் வார்த்தைகளைக் கேட்ட பிறகே, திரையுலகில் எதையும் சாதாரணமாக, விளையாட்டாக நினைத்துவிடக்கூடாது என்பது புரிகிறது. அதனால் என்னால் இயன்றவரை அனைத்திலும் முழுமையாகக் கவனம் செலுத்துவேன்.
“எடுத்த எடுப்பிலேயே என்னை அம்மாவோடு ஒப்பிடுவார்கள் என்பது தெரியும். அம்மாவுக்குக் கிடைத்தது போன்ற வேடங்கள் எனக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். ரசிகர்களின் அன்பைப் பெற அம்மாவின் உழைப்பு, மற்றவர்களின் அக்கறை எல்லாம் எனக்கும் அமைய வேண்டும்.
“இயல்பாகவே அம்மாவின் மரபணு என்னிடம் இருக்கிறது. அதனால் என் உழைப்பும் சேரும்போது திரையுலகில் அம்மாவைப் போல் நிலையான இடத்தைப் பெற முடியும் என நினைக்கிறேன்.
“என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். பெற்றோரிடம் இருந்து எனக்கு எந்தத் தருணத்திலும் எந்தவிதமான அழுத்தமும் இருந்ததில்லை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்குப் பிடித்த கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காகத் தீவிரமாகக் களமிறங்கிவிட்டேன்,” என்கிறார் அவந்திகா.

