படத்தின் வெற்றி தோல்வியை வைத்து இயக்குநர்களை மதிப்பிடமாட்டேன்: விஜய் சேதுபதி

2 mins read
fd92191e-32fd-41f7-b258-61379e6ad6a3
இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மியுடன் விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஏஸ்’ படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும் அவர் நடிக்கிறார். அப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அவற்றிற்கு அடுத்தபடியாக, தெலுங்குப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்திலும் அவர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

அப்படத்தில் நடிகை தபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு விஜய் சேதுபதி அளித்த நேர்காணலின் சில துணுக்குகளை இதில் காணலாம்.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான கடைசி இரு படங்களும் ரசிகர்களைப் பெரிய அளவில் கவரவில்லை. இப்படியான நிலையில் அவர் இயக்கத்தில் நடிப்பது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, “என்னுடைய இயக்குநர்கள் முன்பு எடுத்த படங்களை வைத்து அவர்களின் திறமையை நான் மதிப்பிடமாட்டேன்,” என்றார் விஜய் சேதுபதி.

மேலும், தனக்குக் கதைப் பிடித்திருந்தால் அப்படத்தில் நடிப்பேன் என்றும் அவர் கூறினார்.

“இயக்குநர் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்திரைப்படம் ஒரு முழுமையான அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும். இப்படியான ஒரு களம் இதற்கு முன் நான் செய்ததில்லை,” என தான் நடிக்கவிருக்கும் படம் குறித்து அவர் விவரித்தார்.

“ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் வெவ்வேறு கதைக் களங்களுக்குச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது,” என அவர் தெரிவித்தார்.

தபு போன்ற திறமையான நடிகையுடன் பணிபுரிவதை எண்ணியும் இதற்கு முன் நான் இணைந்து நடித்திராத நடிகை அவர் என்பதை நினைத்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என விஜய் சேதுபதி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்