நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசனை வைத்து தம்மால் படம் இயக்க இயலாது என இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா, பாலா 25 விழா ஆகிய இரண்டும் அண்மையில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாக்களில் நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, சிவகுமார், கருணாஸ், நடிகை வேதிகா, இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, மாரி செல்வராஜ் எனத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது பேசிய பிரபலங்கள் பலரும் பாலாவிடம் சில கேள்விகளை எழுப்ப, அவற்றுக்கு பாலாவும் தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார். இது தொடர்பான காணொளிகளைத் தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மூத்த நடிகர் சிவகுமார், ‘ரஜினி, கமலை வைத்து படம் இயக்குவீர்களா?’ என்று எழுப்பிய கேள்விக்கு, “அதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் பாதை வேறு, என் பாதை வேறு,” எனப் பதில் அளித்துள்ளார் பாலா.
மற்றொரு கேள்விக்கு, சிறு வயதிலேயே தனது தாயார் தன்னை தத்து கொடுத்துவிட்டதாகவும் பெற்ற தாயிடம் வளராமல் போனதால் மனரீதியில் தாம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதல் குறித்து சிவகுமார் எழுப்பிய கேள்விக்கு, “இரண்டு, மூன்று நடிகைகள் என்னைக் காதலித்தனர். ஆனால் அவர்களுக்கு இப்போது திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதால் பெயரைச் சொல்ல மாட்டேன்,” என பாலா நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.