தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கும் ஆண்ட்ரியா தயாரித்து, நடித்திருக்கும் ‘மாஸ்க்’ வெற்றி பெற்றதால் தான் அடமானம் வைத்த வீட்டை மீட்டு விடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர்தான் ஆண்ட்ரியா. ஆனால், கௌதம் மேனன் அவரை ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நடிகையாக மாற்றினார்.
அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மங்காத்தா’, ‘விஸ்வரூபம்’ படங்கள் மூலம் முழுநேர நடிகையாக மாறினார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் ‘அன்னையும் ரசூலும்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
நடிப்பு அவருக்கு கைகொடுத்தாலும் தனது ஆணி வேரான பாடல்கள் பாடுவதை விடவில்லை.
ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் பாடல் பதிவு என மும்முரமாக இருக்கும் ஆண்ட்ரியாவுக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் கிடைத்தது என்றால் அது ‘வடசென்னை’ சந்திராதான்.
படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று கலக்கியிருந்தார். அந்தப் படத்தில் அவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நடிகை, பாடகி என இருந்த ஆண்ட்ரியா திடீரென்று ‘மாஸ்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்தை தயாரிப்பதற்காக நான் என்னுடைய வீட்டை அடமானம் வைத்து இருக்கிறேன். இந்த வீட்டை வாங்குவதற்கான பணம் படங்களில் நடித்ததால்தான் கிடைத்தது.
“அந்தப் பணத்தைத்தான் மீண்டும் நான் சினிமாவிலேயே போட்டிருக்கிறேன். தற்பொழுது படம் நன்றாக இருப்பதாக பலர் விமர்சனம் செய்திருப்பதால் நான் அடமானம் வைத்த வீட்டை மீட்டுவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது,” என்று தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவிட்டு இருக்கிறார் ஆண்ட்ரியா.

