தான் யாரிடமும் அதிகம் பேசாத ரகம் என்கிறார் கிரித்தி ஷெட்டி.
ஒரு இடத்தில் நிறைய பேர் கூடியிருந்தாலும், ஒருசிலர் மட்டுமே காணப்பட்டாலும் தனக்குப் பிடித்தமானவர்களுடன் மட்டுமே பேசுவாராம்.
“ஒரு வகையில் சிலருக்கு நல்ல விஷயமாகத் தோன்றும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் கெட்ட பழக்கம் என்றுதான் சொல்வேன்.
“ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரிடம் பேசலாமா, வேண்டாமா என மனத்துக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும். அப்படி அடித்தால் அந்த நபரிடம் இருந்து ஒதுங்கி அமைதியாக இருந்துவிடுவேன். தனிமையாக இருக்கிறோம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். எப்படிப்பட்ட சூழலிலும் என்னால் அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்க முடியும்,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் கிரித்தி.
தற்போது தமிழில் சரளமாகப் பேசுவது குறித்து கேட்டால், சொந்த முயற்சிதான் காரணம் என்று பதில் கிடைக்கிறது.
“பொதுவாக படங்களில் நடிக்கும்போது என்னுடைய வசனம் மட்டுமல்லாமல், உடன் நடிப்பவர்களின் வசனங்களையும் சேர்த்துப் படிப்பேன். இதனால் கதையோட்டத்தை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. அந்த மொழியும் எளிதில் வசமாகும்.
“இப்படித்தான் தமிழும் எனக்குக் கைகூடியுள்ளது. இப்போது 50 விழுக்காடு மட்டுமே தமிழில் பேசுகிறேன். அடுத்த ஆண்டுக்குள் இது நூறு விழுக்காடாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று சொல்பவர், தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் வருவதாகச் சொல்கிறார்.
கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்த சின்னக் குழந்தை இவர்தான் என்று ஒரு தகவல் பரவியது.
தொடர்புடைய செய்திகள்
அன்று குழந்தையாக நடித்தவர் இன்று கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து தோழிகளும் விசாரித்தனராம்.
“அவ்வளவு சிறிய வயதில் நான் நடிக்க வரவில்லை. என் தோழிகள் என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டனர். பள்ளி நாள்களிலேயே விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன்.
“அப்போது என் தோழிகளுடன் நான் பழகும் விதம் சற்றே மாறியது. மற்றபடி, என் தோழிகளுக்கு நான் நடிகையானது மகிழ்ச்சி. அவர்களில் சிலருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன்.
“கல்லூரிப் படிப்பு, வேலை, குடும்ப பொறுப்புகள் என்று ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டாலும், சிறு வயது நட்பும் தொடர்பும் மட்டும் இன்னும் நீடிக்கிறது,” என்று கூறியுள்ளார் கிரித்தி.
இவரைப் பெரும்பாலான சக நடிகர்கள் ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார்களாம். தன்னுடன் நடித்த பெரும்பாலானவர்கள் அனுபவ கலைஞர்கள் என்பதுடன் பழகுவதற்கு இனிமையானவர்கள் என்கிறார்.
“நான் நாக சைதன்யாவுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அந்த வகையில் அவருடன் இணைந்து நடிப்பது சௌகரியம் எனக் கருதுகிறேன். அவர் மிகவும் நேர்மையானவர்.
“நான் என்ன பேசினாலும், தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார். மலையாள நடிகர் டோவினோ தாமசுடன் நடிப்பதும் சுவாரசியான விஷயமாக இருக்கும்,” என்று சொல்லும் கிரித்திக்கு, தமிழில் அனைத்து முன்னணி நாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதாம்.
அது மட்டுமல்ல, அனைவரையும் வைத்துப் படம் இயக்கவும் ஆசைப்படுகிறார்.
கிரித்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தின் வெளியீடு, நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமாகி உள்ளது.

