தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் மிருணாள் தாக்குர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அவர், 2022ஆம் ஆண்டு வெளியான ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் கால்பதித்தார்.
தொடர்ந்து இந்தி, தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் மிருணாள், அண்மையில், அஜய் தேவ்கனுடன் இணைந்து ‘சன் ஆஃப் சர்தார் 2’ படத்தில் நடித்தார்.
அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படக்குழுவினர் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.
அதன் ஒருபகுதியாக ‘இன்ஸ்டன்ட் பாலிவுட்’ ஊடகத்திற்கு மிருணாள் நேர்காணல் அளித்துள்ளார்.
அதில் தமது வாழ்க்கை பற்றியும் திரைத்துறையில் எவ்வாறு நேர்மறை எண்ணத்தோடு அவர் இருக்கிறார் என்பது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
குறிப்பாக, கண் திருஷ்டி மீதான நம்பிக்கை குறித்து மிருணாள் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“எனது திரையுலக வாழ்க்கையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. என்னுடைய இலக்குகளை நான் அடையவில்லை. ஆனால், அதுகுறித்து நான் பேசமாட்டேன். நான் அதை அடைந்த பிறகே அது பற்றி பிறரிடம் தெரிவிப்பேன்,” என அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஒரு செயல் நடப்பதற்குமுன் பிறரிடம் அதைத் தெரிவித்தால் அச்செயல் நன்றாக நடைபெறாது என்பதைத் தான் நம்புவதாகக் கூறிய அவர், கண் திருஷ்டி செயலைக் கெடுத்துவிடும் என்கிறார்.
“ஒருவர் தம்மைப் பற்றிப் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும். மற்றவரிடம் பகிரும் தகவல்களில் ஒரு கட்டுப்பாடு வேண்டும்.
“எனக்கு ஒரு வித்தியாசமான ஆளுமை உள்ளது. ஒருசிலர் அடுத்த ஆண்டு தாம் எத்தனை படங்களில் நடிக்கின்றோம் என்பது பற்றிப் பேசலாம். ஆனால், நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை.
“என் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி நான் தொடர்ந்து சிந்திப்பதையோ, பேசுவதையோ விரும்புவதில்லை என கண் திருஷ்டி மீதான தமது நம்பிக்கையை விவரித்தார் மிருணாள்.
ரசிகர்கள் தம்மிடம் தமது வேலை பற்றியும் அழுத்தங்களை எப்படிச் சமாளிக்கிறேன் என்பது குறித்தும் கேட்பதாகத் தெரிவித்த அவர், “நேர்மறை எண்ணம் கொண்ட நான் எனது திரையுலகப் பயணத்தில் எந்தவொரு அழுத்தத்தையும் உணரவில்லை எனச் சொன்னார்.
மேலும், ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்புகூட தமக்கு எந்தவொரு பதட்டமோ, அழுத்தமோ ஏற்பட்டதில்லை என அந்த நேர்காணலில் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, நடிகர் தனுசுடன் மிருணாள் இணைத்து பேசப்பட்டு வருகிறார்.
இருவரும் இணைந்து ஒரு விருந்தில் கலந்துகொண்டதே அதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
‘சன் ஆஃப் சர்தார் 2’ படத்தின் திரையிடல் நிகழ்ச்சியிலும் தனுஷ் பங்கேற்றது ஊகங்களுக்குத் தீனிபோட்டது.
இந்தித் திரையுலக வட்டாரத்தில் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.
தங்களது உறவை வெளிப்படையாக அவர்கள் தெரிவிக்கவில்லை என்றாலும் விருந்து, நிகழ்ச்சிகளில் ஒன்றாகச் செல்வது குறித்தும் அவர்கள் கவலையடையவில்லை என்றே தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தமது முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யாவைக் கடந்த ஆண்டு பிரிந்தார் என்பது அறிந்த தகவல்.


