மீண்டும் அப்படி நடிக்க மாட்டேன்: அமலா பால்

மீண்டும் அப்படி நடிக்க மாட்டேன்: அமலா பால்

படம்: விகடன்

02 Oct 2026 - 4:09 pm

2 mins read

கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர் ரத்னா குமார் இயக்கத்தில் வெளியாகி, திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பிய திரைப்படம் ‘ஆடை’.

சுதந்திரமான சிந்தனை கொண்ட ‘காமினி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் படத்தின் நாயகி அமலா பால்.

அரை நிர்வாணக் கோலத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அப்போது பெரிதும் பேசப்பட்டது. பல்வேறு விவாதங்களுக்கும் வித்திட்டது.

இந்நிலையில், அத்தகைய கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது குறித்து நடிகை அமலா பால் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

“அந்தப் படத்தில் (ஆடை) நடித்தபோது என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இருந்தது. படத்தின் கதையைக் கேட்டு நடிப்பது உறுதியான பிறகும் இயக்குநர் ரத்னா குமார் கதையை எவ்வாறு கையாளப் போகிறார் என்ற சந்தேகம் எனக்குள் நீடித்தது.

“ஆடையில்லாத காட்சிகள் கதைக்கு உண்மையிலேயே அவசியமானதா அல்லது வெறுமனே படத்திற்கான விளம்பரத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விகளும் என் மனத்தில் எழுந்தன,” என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அமலா பால்.

மேலும் படக்குழுவினரின் அணுகுமுறையையும் அவர்களின் நம்பகத்தன்மையையும் புரிந்துகொள்ள இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாம். இயக்குநர், ஒளிப்பதிவாளர் மீது முழு நம்பிக்கை ஏற்பட்ட பிறகே நடிக்கச் சம்மதித்தாராம்.

“இது வெறும் நிர்வாணத்தை முதன்மைப்படுத்தும் படமாக இல்லாமல், கலைநயமிக்க உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தபிறகே படப்பிடிப்பில் பங்கேற்றேன்.

“படப்பிடிப்புத் தளத்தில் குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு, எனக்குச் சௌகரியமான சூழலைப் படக்குழு ஏற்படுத்திக் கொடுத்தது. அதனால் அந்தப் படம் ஓர் அழகான அனுபவமாக அமைந்தது. எனினும், இனி இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

“தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வாய்ப்பு வந்தால், அதில் நிச்சயம் நடிக்கமாட்டேன். ஏனெனில், ஒருமுறை அப்படி நடித்துவிட்டால் திரைத்துறை நம்மீது உடனடியாக முத்திரை குத்திவிடும். ஒரே மாதிரியான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கும் நடிகை எனப் பெயரெடுக்க விரும்பவில்லை,” என்று கூறியுள்ளார் அமலா பால்.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்இயக்குநர்