என்னதான் பிரபல சினிமா நடிகையாக வளர்ந்துவிட்டாலும் சொந்த ஊர், அங்குள்ள மக்கள், சொந்த பந்தங்கள் என்றால் உடனே உருகிவிடுகிறார் பிரியா ஆனந்த்.
மயிலாடுதுறை அருகே உள்ள தாண்டவபுரம்தான் இவரது சொந்த ஊராம். இது பிரியாவின் தாயாருடைய பூர்வீகம். எது சொந்த ஊர் என்று யாராவது கேட்டால், தாண்டவபுரத்தைத்தான் பதிலாகச் சொல்வாராம்.
பிரியா ஆனந்த் பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத்தில்தான். அதனால்தானோ என்னவோ இவருக்குப் பிடித்தமான உணவாக இருப்பது பிரியாணி.
ஹைதராபாத்தில் படித்து முடித்த கையோடு, பத்திரிக்கைத் துறையில் மேற்படிப்பைப் தொடர அமெரிக்கா சென்றுவிட்டார்.
“அப்பாவுக்கு பாதி தெலுங்கு, பாதி மராத்தி என்று இரு மொழிகள் தெரிந்தாலும் வீட்டில் ஆங்கிலத்தில்தான் பேசுவோம்.
“சிறு வயது முதல் சைக்கிள் ஓட்டுவது, ஆட்டோ, பேருந்துகளில் பயணம் செல்வது மிகவும் பிடிக்கும். அப்படியொரு பயணத்தின்போது எனக்கு அறிமுகமானவர்தான் பெண் ஆட்டோ ஓட்டுநர் ரேவதி. இப்போதும்கூட அவரது தொலைப்பேசி எண்ணை வைத்துள்ளேன்,” என்கிறார் பிரியா ஆனந்த்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில், பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்தான் தனக்குப் பிடித்தவர் என்கிறார்.
பிரியா ஆனந்துக்குப் பிடித்தமான நடிகை ஸ்ரீதேவி. சிறு வயதில் இருந்தே ஸ்ரீதேவிபோல் உருவாக வேண்டும் என்று விரும்புவாராம்.
பின்னாள்களில் ஸ்ரீதேவியுடன் ஓர் இந்திப் படத்தில் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் அவருக்காக இயக்குநர் பால்கிக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரியா ஆனந்த்.
“தமிழில் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து மூன்று படங்களில் நடித்துள்ளேன். அவருடன் நடிக்கும்போது பொழுதுபோவதே தெரியாது. அவர் நம்மைக் கேலி செய்கிறாரா அல்லது இயல்பாகப் பேசுகிறாரா என்பதை எளிதில் கண்டுபிடிக்கவே முடியாது. அவர் நடித்த படங்களை விரும்பி பார்ப்பேன்.
“சென்னையில்தான் நடிகர் விஜய்யை முதன்முதலாகச் சந்தித்தேன். ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் நடந்த திடீர் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது வியப்பளித்தது.
“முதல் சந்திப்பு நிகழ்ந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகே அவரை மீண்டும் சந்திக்க முடிந்தது,” என்று கூறும் பிரியாவுக்குப் பிடித்தமான இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.
அவர் இசையமைத்த ‘ஏதோ செய்கிறாய்’ என்ற பாடல்தான் தன்னை ரசிகர்களிடம் கொண்டு போய்சேர்த்தது என்கிறார்.
நல்ல ஒரு திகில் படத்தில், ‘பீரியட்’ கதையில் நடிக்க வேண்டும் என்பதும் இவரது ஆசையாம். தமிழில் நிறைவேறாவிட்டாலும் மலையாளத்தில் இவை இரண்டுமே நிறைவேறிவிட்டதாம்.
“அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு அதிக விருப்பம் உண்டு. இதுவரை ஒரு படம்கூட இயக்காத உதவி இயக்குநர்களிடம்கூட கதை கேட்கத் தயங்குவதில்லை. யார் குறித்தும் உடனுக்குடன் குறைவாக எடைபோடும் பழக்கம் இல்லை.
“சாக்லெட், நகைக்கடை, துணிக்கடை விளம்பரம் என்று நடித்து அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டேன். நான் நடித்த இரண்டாவது படம்தான் ‘வாமனன்’. எனினும், அந்தப் படம்தான் முதலில் வந்தது,” என்று கூறியுள்ள பிரியா ஆனந்த், அண்மைக்காலமாக சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார்.
அவ்வப்போது முட்டை மட்டும் எடுத்துக் கொள்வாராம்.
“உணவிலோ பானங்களிலோ சர்க்கரை சேர்ப்பதில்லை. வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்துவிட்டால் உடல்நலம் நன்றாக இருக்கும்.
“என்னைப் பற்றிய இன்னொரு முக்கியமான தகவல். தெரு நாய்களுடன் விளையாடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அவற்றோடு விளையாட வேண்டும் என்பதற்காகவே என் சைக்கிளில் கிளம்பி வெளியே சென்று திரும்புவேன். பல மாதங்களுக்குப் பிறகு பார்த்தாலும் அவை நம்மை மறக்காமல் பாசத்துடன் ஓடிவரும். அந்த அன்பு அலாதியானது,” என்று பேட்டியில் கூறியுள்ளார் பிரியா ஆனந்த்.

