முழு நீள வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் தனது நீண்ட நாள் விருப்பம் என்கிறார் அதிதி சங்கர்.
பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் மகள் என்றபோதிலும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் அனைவரையும் அண்ணா, ஐயா என்று மரியாதையுடன் குறிப்பிட்டுப் பேசிப் பழகுகிறார் அதிதி.
அது மட்டுமல்ல, அதிதி படப்பிடிப்பில் இருந்தால், அந்த இடமே கலகலப்பாக மாறிவிடுகிறது.
“இதுதான் என்னுடைய உண்மையான குணம். எப்போதுமே புத்துணர்ச்சியுடனும் உடல் வலுவோடும் இருப்பதையே விரும்புவேன். நான், நானாக இருப்பதில் தவறில்லை என்பதால், அப்படி இருப்பதில்தான் எனக்கு அதிக விருப்பம்,” என்று சொல்லும் அதிதியின் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ‘நேசிப்பாயா’ திரைப்படம் வெளியாகி உள்ளது.
வழக்கம்போல் இம்முறையும் தனது தாயாரின் கைப்பக்குவத்தில் உருவான பொங்கலை ஒருபிடி பிடித்ததாகச் சொல்கிறார்.
“எப்போதுமே அம்மா தயாரிக்கும் பொங்கல் தனிச்சிறப்புடன் இருக்கும். அதைச் சுவைத்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றத்தைப் பார்த்து ரசிப்போம்.
“பொங்கல் திருநாளன்று ஜாலியாக இருக்க வேண்டும் என நினைப்பேன். எனக்கும் ஓரளவு சமைக்கத் தெரியும். அம்மாவும் பாட்டியும் சொல்லித் தந்தது போக, ‘யூடியூப்’ பார்த்தும் சிலவற்றைச் சமைக்க கற்றுக்கொண்டேன். பொங்கல், புத்தாண்டு சமயங்களில் நேரம் கிடைத்தால் வீட்டில் சமைப்பேன்,” என்று சொல்லும் அதிதிக்குப் பிடித்தமான நடிகர் ரஜினிகாந்த்.
நடிகைகளில் நித்யா மேனனின் தீவிர ரசிகை. அண்மைக்காலமாக சாய் பல்லவியும் இவரது விருப்பப் பட்டியலில் இணைந்துள்ளாராம்.
தொடர்புடைய செய்திகள்
நடிகர் விஜய் நடித்த படங்களையும் பார்ப்பாராம். அவரது அரசியல் பிரவேசத்தை வரவேற்று, வாழ்த்துவதாகச் சொல்கிறார்.
பெண்கள் துணிச்சலுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் அதிதி, பல பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து துணிச்சலுடனும் வெளிப்படையாகவும் பேசத் தொடங்கி இருப்பது நல்ல மாற்றம் என்கிறார். அதேசமயம் துணிச்சல் இருந்தால் மட்டும் போதாது. பெண்கள் பாதுகாப்பாக இருப்பதும் அவசியம் என அறிவுறுத்துகிறார்.
அதிதியின் இளைய சகோதரரும் திரைத்துறையில்தான் பணியாற்ற விரும்புகிறார். விஸ்காம் படிப்பை முடித்துள்ள அவர், வெற்றிமாறன், முருகதாஸ், தன் தந்தை சங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளாராம்.
“தம்பிக்கு நடிப்பிலும் ஆர்வம் உள்ளது. அவர் நடிப்பு, இயக்கம் ஆகியவற்றில் எதைத் தேர்வு செய்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“அப்பா இயக்கத்தில் நடிக்கும் ஆசை எனக்கும் உண்டு. ஆனால், அவராக வாய்ப்பு கொடுத்தால்தான் உண்டு. மிக விரைவில் அது நடக்கும் என நினைக்கிறேன். அதற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
“நான் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் சினிமா துறைக்கு வரவில்லை. எனவே, எதற்காகவும் அவசரப்படுவதே இல்லை,” என்கிறார் அதிதி.
அண்மையில் வெளியான ‘நேசிப்பாயா’ படத்தில் புதுமுகமான ஆகாஷ் முரளியுடன் நடித்திருப்பது குறித்து பலரும் கேட்கிறார்களாம். இவ்வாறு நடிப்பதால் தனது திரையுலக முயற்சிகள் ஏதும் பாதிக்கப்படாது என நம்புவதாகச் சொல்கிறார்.
“நான் அறிமுக நாயகியாக இருந்தபோது நடிகர்கள் கார்த்தியும் சிவகார்த்திகேயனும் என்னுடன் இணைந்து நடிக்க முன்வந்தனர். அவர்களிடம் அத்தகைய பெருந்தன்மை இருந்தது. அதேபோன்று நானும் அறிமுக நாயகர்களுடன் இணைந்து நடிக்கிறேன்.
“நான் கதைகளைத் தேர்வு செய்வதில் குழப்பம் அடைவதே இல்லை. முதலில் கதை எனக்குப் பிடித்திருக்க வேண்டும். சில கதைகளை நான் கேட்ட பிறகு அம்மாவும் கேட்பார். அப்பாவுக்கு நேரம் இருந்தால் அவரும் கேட்பதுண்டு,” என்கிறார் அதிதி.