அனுஷ்காவைப் பின்பற்ற விரும்புகிறேன்: சுருதி

அனுஷ்காவைப் பின்பற்ற விரும்புகிறேன்: சுருதி

3 mins read
4f0b1dcb-ad93-4547-94cd-62f9c3d0ea15
சுருதி பெரியசாமி. - படம்: ஊடகம்

எத்தகைய எல்லைகளும் இல்லாமல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே தமது கனவு என்கிறார் புது நாயகி சுருதி பெரியசாமி. ‘நந்தன்’ படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

அறிமுக நடிகை என்று சொல்ல முடியாத அளவுக்கு, அருமையாகவும் யதார்த்தமாகவும் நடித்து அசத்தியுள்ளார் சுருதி. இவருக்கு நடிகை அனுஷ்காவைத்தான் மிகவும் பிடிக்குமாம்.

“அனுஷ்கா நடித்த பல கதாபாத்திரங்களுக்கு நான் தீவிர ரசிகை. சமையல் கலைஞர், மருத்துவர், கிராமத்துப்பெண், அதிரடி நாயகி என்று பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார். அவரைப்போல் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்கிறார் சுருதி.

‘மாடலிங்’ துறையிலும் நன்கு அறியப்பட்ட முகமாக வலம் வரும் இவர், தனது தாயார்தான் தம்முடையை வளர்ச்சிக்குப் பின்புலம் என்கிறார்.

சுருதியின் சொந்த ஊர் சேலம். உயிரி தொழில்நுட்பம் சார்ந்த பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பணியிலும் இருந்தாராம்.

சுருதிக்கு 10 வயது இருக்கும்போதே, அரசு ஊழியரான அவரது தந்தை காலமாகிவிட்டார். அதன் பின்னர் தனக்குத் தெரிந்த தையல் கலையை வைத்து மகளை வளர்த்து ஆளாக்கினாராம் சுருதியின் தாயார்.

“வேலையில் சேர்ந்த பிறகுதான் மாடலிங் வாய்ப்பு தேடி வந்தது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொண்டு பத்து இடங்களுக்குள் இடம்பெற்றேன்.

“அதன் பின்னர் பல்வேறு அழகிப்போட்டிகளில் பங்கேற்று மாடலிங் வாய்ப்புகளையும் கைவிடாமல் பரபரப்பாக இயங்கியதுடன், சில படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்தேன்,” என்கிறார் சுருதி.

மேலும் ‘தி ரவிக்கை ஸ்டோர்’ என்கிற துணிக்கடை ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.

“இந்தச் சமயத்தில்தான் ‘நந்தன்’ படக்குழுவினர் எனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்துவிட்டு நடிக்க அழைப்பு விடுத்தனர். நல்ல கதாபாத்திரம், நல்ல கதைக்களம் என்பதால் தயக்கம் இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

“இந்தப் படத்தில் நடிகர் சூரிதான் நாயகனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. பிறகு புதுமுகம் ஒருவர் நடிப்பார் என்றனர். யாராக இருந்தாலும் நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது.

“ஆனால் படப்பூசையின்போது சசிகுமார் நாயகன் என்று தெரிய வந்தது. ஒரு வகையில் இன்ப அதிர்ச்சியாக இருந்தது,” என்று சொல்லும் சுருதி, ‘நந்தன்’ படத்தில் ஏற்று நடித்த செல்வி கதாபாத்திரம்போல் தமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்.

சேலம் அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில்தான் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு சுமார் 10 நாள்கள் அங்கு தங்கியிருந்தாராம் சுருதி.

“கதைப்படி, எனக்கும் சசிகுமாருக்கும் ஒரு வீடு இருக்கும். அந்த வீட்டில் தற்போது வசித்து வரும் குடும்பத்தினர்தான் எனக்கு கிராம வாழ்க்கை குறித்து பயிற்சி அளித்தனர். எவ்வாறு புடவைகட்ட வேண்டும், சண்டை என்று வந்தால் எப்படி வரிந்துகட்டி நிற்க வேண்டும். கொண்டையை நாமாக எப்படி போட்டுக்கொள்வது என்று ஒரு வாரம் முழுவதும் ஒத்திகை பார்த்தோம்.

“குழாயடிச்சண்டை, சாணம் கொண்டு முறைவாசல் தெளித்துக் கோலமிடுவது ஆகியவற்றில் ஒவ்வொரு பயிற்சியின்போதும் சிரமப்பட்டேன். காரணம் மாடல் அழகி என்பதால் தன்னைத்தானே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் நகரத்து இளம்பெண் நான். ஆனால், படப்பிடிப்புக்காக சாணத்தைத் தொட்டு முறைவாசல் தெளிக்கும் அளவுக்கு இந்தப்பயிற்சி என்னை மாற்றி இருந்தது.

“‘முள்ளும் மலரும்’ படத்தில் மங்காவாக நடித்த படாபட் ஜெயலட்சுமி, வள்ளியாக நடித்த நடிகை ஷோபா, ஆகிய இருவரையும்தான் என் முன்மாதிரியாகக் கருதி இதில் நடித்தேன். இருவருமே மிகுந்த அர்ப்பணிப்புடனும் யதார்த்தமாகவும் நடித்திருப்பார்கள். அவர்கள்தான் என்னுடைய ஆசிரியைகள்,” என்கிறார் சுருதி.

சசிகுமார் குறித்து?

“அவரைப் பொறுத்தவரை மிகுந்த பொறுமைசாலி. எப்போதுமே அமைதியாக இருப்பார். ஆனால் மேகரா முன் நிற்கும்போது நடிப்பு ராட்சசனாக மாறிவிடுகிறார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்கிறார் சுருதி.

குறிப்புச் சொற்கள்