சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், அதிரடித் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
“சென்னைக்கு வரும்போதெல்லாம் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருக்கும். நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். எனக்கு மலரும் நினைவுகள் இங்கு அதிகம் உள்ளன. நான் சென்னையில் இருந்தபோதுதான் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் எப்போதும் கதாநாயகனாக என்னை நினைத்ததில்லை. கதாநாயகன் என்றால் கமல்ஹாசன் மாதிரி, அமிதாப் பச்சன் மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர்கள்தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். என் அப்பாதான் எனது முன்மாதிரி என்று நான் சொன்னதில்லை. ஆனால் கமல்ஹாசன்தான் எனது முன்மாதிரி. அவர் அழகன். பல மேடைகளில் அவரிடமே சொல்லி இருக்கிறேன், நான் பெண்ணாக பிறந்திருந்தால் உங்களை எப்படியாவது திருமணம் செய்திருப்பேன் என்று.
“நானும் திரையுலகிற்கு வந்தேன். நிறைய தோல்விகளையும் நிறைய வெற்றிகளையும் பார்த்துள்ளேன். எதையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ளமாட்டேன். வாழ்க்கையில் பல மரணங்கள், வீழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்த்துள்ளேன். எனக்குத் தலையில் அறுவை சிகிச்சை, புற்றுநோய் என அனைத்தையும் கடந்து வந்தேன். இந்தியா முழுக்க பல ரசிகர்கள் எனக்காக வேண்டினார்கள். இந்த இடத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தத் திரைப்படம், எனக்குக் கதை சொன்னபோதே பிடித்திருந்தது. மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் அர்ஜுன்,” என்று சிவராஜ்குமார் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசினார்.

