உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது ‘நீளிரா’ திரைப்படம். வெள்ளிக்கிழமை (மார்ச் 3) வெளியீடு கண்டுள்ளது.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ‘பாகுபலி’ ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக இணைந்து தயாரித்துள்ள படம் இது. இலங்கைத் தமிழர் சோமிதரன் இயக்கியுள்ளார்.
‘நீளிரா’ முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் ராஜு முருகன், “உலகில் இன்று ஏவுகணைகளும் குண்டுவெடிப்புகளும் நிகழ்த்தும் போருக்கு இணையாக, சத்தமில்லாமல் ஒரு ‘கருத்தியல் போர்’ நடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுதப் போரை விடவும் இது மிக முக்கியமானது. இதற்கு உதாரணமாக இஸ்ரேல் உருவான வரலாற்றைச் சொல்லலாம்,” என்றார்.
அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளும் தங்கள் கலாசாரத்தை உலகிற்குச் சொல்ல சினிமாவைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், உலகின் முன்னோடி மொழியான தமிழிலிருந்து அத்தகைய உலகத்தரம் வாய்ந்த அரசியல் படங்கள் வரவில்லை என்பது வருத்தமான உண்மை என்றார்.
ஈழப் போராட்டம் என்பது உலகம் வியந்து பார்த்த 50 ஆண்டு காலப் போராட்டம் என்றும் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் வேறு எந்த இனத்திலாவது நடந்திருந்தால், அது குறித்து நூற்றுக்கணக்கான படங்கள் வந்திருக்கும் என்றும் உணர்வுபூர்வமாகப் பேசினார் ராஜு முருகன்.
ஆனால், தமிழில் அப்படி ஒரு படம்கூட உருவாகவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதற்குத் தணிக்கைக் குழுவின் அரசியல் கெடுபிடிகள், படைப்பாளிகளிடம் உள்ள இறக்குமதி சிந்தனை மற்றும் வியாபாரச் சந்தை ஆகியவைதான் முக்கியக் காரணங்கள் என விமர்சித்தார்.
“இவ்வளவு பெரிய போர் நடந்தும் உலக அளவில் ஒரு படம்கூட வரவில்லையே என்ற ஏக்கத்தை உடைக்கும் முதல் படமாக ‘நீளிரா’ இருக்கிறது. ஜான் மகேந்திரன் போன்றவர்கள் ஏற்கெனவே முயற்சி செய்திருந்தாலும், நவீன சினிமாவின் நேர்த்தியோடு எடுக்கப்பட்ட முதல் ஈழத் திரைப்படம் இதுதான் என்று நான் சொல்வேன்.
தொடர்புடைய செய்திகள்
“இயக்குநர் சோமிதரனை எனக்கு யாழ்ப்பாண நூலக எரிப்பு குறித்த ஆவணப் படத்திலிருந்தே தெரியும். ஈழத்தின் வலியை உலகிற்குச் சொல்ல வேண்டும் எனத் தொடர்ந்து இயங்கும் அவர், இந்தப் படத்தில் ஒரு வன்முறைக் காட்சிகூட இல்லாமல் ஒரு மாபெரும் யுத்தத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்,” என்றார் ராஜு முருகன்.
தணிக்கைக் குழுவிடமிருந்து படத்தை மீட்டு வந்த இயக்குநரின் அறிவாற்றல் வியக்கத்தக்கது என்று பாராட்டிய அவர், மிக முக்கியமாக, இந்தப் படம் எந்த இடத்திலும் வெறுப்பு சிந்தனையை விதைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

