கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்: காப்புரிமை விவகாரம் குறித்து கங்கை அமரன்

2 mins read
7cc1f5a9-fc98-4e04-b2bb-2280ee31f971
இசைஞானி இளையராஜாவுடன் கங்கை அமரன். - படம்: இன்ஸ்டகிராம்

பழைய பாடல்களை அப்படியே மீண்டும் உருவாக்கும் போக்கு தற்போது தமிழ்த் திரையுலகில் பிரபலமாகி வருகிறது.

அப்படி படங்களில் பயன்படுத்தப்படும் பழைய பாடல்களில் பெரும்பாலானவை இளையராஜாயின் இசையில் உருவான பாடல்களாகவே இருக்கின்றன.

தன்னிடம் அனுமதி கேட்காமல் தமது பாடல்களைப் பயன்படுத்தும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்மீது அவர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கிறார்.

அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான, ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் இடம்பெற்றன.

தம்மிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதாகக் கூறி, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்துக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் கடிதம் அனுப்பியிருந்தார். அவ்விவகாரம் திரையுலகில் பெரும் பேசுபொருளானது.

தற்போது அந்தக் காப்புரிமை விவகாரம் தொடர்பாகக் கங்கை அமரன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

அதில், “காப்புரிமை விவகாரத்தில் நாங்கள் அனைத்துலக விதிகளைத்தான் பின்பற்றுகிறோம். மைக்கேல் ஜாக்சன் தானே எழுதி, நடனமாடி, நடித்தார். அவர் கொண்டுவந்த திட்டம்தான் இது.

நாங்கள் முதலில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தோம். அங்குப் பூஜை நாளில் எங்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பர்.

அதன் பிறகு எங்கள் பாடல்கள் நல்ல வியாபாரம் செய்திருக்கும். ஆனால், எங்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அந்தப் பிரச்சினைகுறித்து முழுமையாக அறிந்தோம்,” என்றார் கங்கை அமரன்.

இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு, அனைத்துப் படங்களின் இசை உரிமைகளையும் தமது அண்ணன் இளையராஜா வாங்கி வைத்துக்கொள்வார் எனக் கூறிய அவர், அவை அனைத்தும் இளையராஜாவின் இசைத் தொகுப்புகளின் வரிசையில் சேர்ந்துவிடும் எனத் தெரிவித்தார்.

“கச்சேரிகளில் பாடுபவர்களை அவர் திட்டிய விவகாரத்தில் நான் அண்ணனிடம் சண்டையிட்டேன். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தைத் திட்டியதற்காகவும் அவரிடம் வாக்குவாதம் செய்தேன்,” எனத் தமக்கும் தமது அண்ணனான இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கான காரணம் குறித்து விவரித்தார்.

“அதன் பிறகு, மேடைகளில் பாடுபவர்கள் காப்புரிமை தொகை கட்டத் தேவையில்லை என்று முடிவானது. ஆனால், படங்களில் பயன்படுத்தும்போது அதைக் கட்ட வேண்டும்.

“7 கோடி ரூபாய் செலவழித்து ஒரு படத்துக்கு இசையமைப்பாளரைத் தயாரிப்பாளர் நியமிக்கிறார். அவர்கள் இசையமைக்கும் பாடல்களுக்குக் கிடைக்காத கைதட்டல், எங்கள் பாடல்களுக்குக் கிடைக்கிறது. அப்படியென்றால், எங்களுக்கும் பங்கு தர வேண்டும் தானே? ” எனக் கங்கை அமரன் வினவினார்.

“எங்களிடம் அனுமதி கேட்டிருந்தால், இன்னும் மகிழ்ச்சியாகக் கொடுத்திருப்போம். எங்களுக்குப் பணத்தாசை எல்லாம் இல்லை. நாங்கள் விதிகளின்படி நடக்க வேண்டும்.

“அது அஜித் படம் என்கிற எந்தக் காரணமும் இல்லை. திரையில் ஒலிப்பது எங்கள் பாடல். அவ்வளவுதான். எங்கள் பாடல்கள்தான் உங்களை வெற்றி பெற வைக்கின்றன என்று சந்தோசப்படுகிறோம்,” என அவர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்