தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கிரித்தி ஷெட்டி.
தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், தமிழில் கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பிரதீப் ரங்கநாதனின் ஜோடியாக இவர் நடித்துள்ள ‘எல்ஐகே’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அளிக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில், “நீங்கள் ஒரு மாநிலத்தின் முதல்வரானால் உங்களது முதல் கையெழுத்து எதற்காகப் போடுவீர்கள்?” என ஒரு சுவாரசியமான கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கிரித்தி ஷெட்டி, “நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் போதுமானதாக இல்லை என்றே நான் கருதுகிறேன்.
“எனவே, நான் முதல்வரானால் அத்தகைய குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வருவதற்குத்தான் எனது முதல் கையெழுத்தைப் போடுவேன்,” என்று தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து நடிகை கிரித்தி ஷெட்டி வெளிப்படுத்திய இந்த உறுதியான கருத்து, சமூக ஊடகங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

