பிரபல இயக்குநர் ‘யார்’ கண்ணனின் மகள் சாயா தேவி, ‘கன்னிமாடம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர், பிற மொழிகளிலும் நடித்து பெயர் வாங்கியுள்ளார்.
‘டிஎஸ்பி’ படத்தில் விஜய் சேதுபதியின் சகோதரியாகவும், ‘சார்’ படத்தில் நாயகியாகவும் நடித்ததுதான் தன்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததாகக் கூறுகிறார் சாயா தேவி.
“முதல் படத்தில் அறிமுகமானபோது எனக்கு 14 வயது. என் தாயார் ஜீவா நடனப் பயிற்சியாளர் என்பதால் எனக்கான வாய்ப்புகள் சற்றே எளிதாகக் கிடைத்தன.
“ஆனால், சினிமா மீது எனக்கு சிறு வயதில் பெரிய நாட்டமில்லை. முதல் வாய்ப்பு கிடைத்தபோது, சாதாரணமாகத்தான் நடிக்க வந்தேன். அதன் பின்னர், அத்துறை மீது ஆர்வம் ஏற்பட்டு, பின்னாள்களில் அது காதலாகவே மாறிப்போனது. சினிமாவுக்காக எதையும் தியாகம் செய்யலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்,” என்கிறார் சாயா தேவி.
என்னதான் திரைத்துறையை அருகில் இருந்து கவனித்து வளர்ந்தவர் என்றாலும், முதன்முதலாக கேமரா முன்பு நின்றபோது சற்று பதற்றமாகத்தான் உணர்ந்தேன். தற்போது ஓரளவு அனுபவம் பெற்றுவிட்டாலும்கூட, திரைத்துறையில் நிறைய கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பதாகச் சொல்கிறார்.
அண்மையில் வெளியான ‘பரமசிவன் பாத்திமா’ படத்திலும் இவரைப் பார்க்க முடியும். இப்படத்தில் நடித்த பிறகுதான் சாதி, மதம் குறித்த தெளிவு தமக்குள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்.
சாதி, மதம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி யாரையும் நோகடிக்காமல், அனைவரும் மதச்சார்பற்ற உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இப்படத்தின் நோக்கம் என்றும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் உற்சாகமடைகிறார் சாயா தேவி.
“நடிகர் சூரியுடன் ‘மாமன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எதிர்பாராத ஒன்று. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கதைகூட கேட்காமல் ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்புக்குச் சென்ற பிறகுதான் கதைப்படி, அவரது முன்னாள் காதலி கதாபாத்திரம் எனத் தெரியவந்தது,” என்று சொல்லும் சாயா தேவிக்கு, நடனத்தில் ஆர்வம் அதிகமாம்.
தொடர்புடைய செய்திகள்
ஆறு வயது முதல் முறைப்படி பரதநாட்டியம், கதகளி நடனங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளார்.
“நடனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரேயொரு படத்திலாவது முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். அந்தக் காலத்தில் நன்றாக நடனமாடத் தெரிந்தவர்களுக்குத்தான் திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்குமாம். அது, என் விஷயத்தில் உண்மையாக வேண்டும் என நினைக்கிறேன்,” என்று அண்மைய பேட்டியில் கண்களில் மின்னும் கனவுகளோடு கூறியுள்ளார்.
நடிகையும் சிறந்த நடனக் கலைஞருமான ஷோபனாவுடன் ஒருமுறையாவது இணைந்து நடனமாட வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று. உலகம் முழுவதும் சுற்றி வரும் ஆசையும் உள்ளதாம்.
இந்த இளம் வயதிலேயே ஆன்மிகத்திலும் ஆர்வம் கொண்டுள்ளார் சாயா தேவி. தனது பயணங்களின்போது ஆன்மிகம் குறித்த தேடல்கள்தான் அதிகமாக இருக்கும் என்கிறார்.
“நமக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், உழைப்பும் கற்றலும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
“சினிமாவில் சாதனைகள் புரிய வேண்டும், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டதே இல்லை. ஆனால், என் கடைசி மூச்சு வரை எனது பயணம் இந்தத் துறையில்தான் இருக்க வேண்டும் என மனதார விரும்புகிறேன்.
“அதற்கேற்ப இத்துறையில் என்னை நிலைப்படுத்திக் கொண்டால் போதும்,” என்கிறார் சாயா தேவி.