ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அனுமதியின்றி தமது பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்சக் குருவி’ போன்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாகக் கூறி, இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
“என் அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியது, பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது. எனவே, படத்தில் பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்,” என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, ரூ.5 கோடி இழப்பீடு கோரி இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு, “சட்டபூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தியுள்ளோம்,” என்று படக்குழுவினர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே பல திரைப்படங்களில் தனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதற்காக வழக்குகள் தொடர்ந்துள்ள இளையராஜா, இப்போது அஜித்தின் படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

