இளையராஜாவின் மகள் பவதாரிணி இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார் அவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார்.
இந்நிலையில், பவதாரிணியின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
“பெண்கள் மட்டுமே அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க வேண்டும் என பவதாரிணி என்னிடம் கூறியிருந்தார். அதுதான் அவரின் கடைசி விருப்பமாகவும் இருந்தது. அவர் ஆசைப்பட்டது போல், 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே அடங்கிய ஒரு இசைக்குழுவை தொடங்கப் போகிறேன். இதற்காக மலேசியாவில் ஏற்கெனவே 2 குழுக்களைத் தேர்வு செய்துவிட்டேன்,” எனத் தான் வெளியிட்ட அறிக்கையில் இளையராஜா தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இருந்து ஆள்களை தேர்வு செய்து இந்த இசைக்குழுவை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

